ஆக்கம் – விமர்சனம்

கூலிப்படை பின்னணியாக கொண்ட மீண்டும் ஒரு வடசென்னைப்படம் என்கிற லேபிளுடன் வெளியாகியுள்ள படம் தான் ‘ஆக்கம்’.

நண்பர்களுடன் சேர்ந்து சின்னச்சின்ன திருட்டுக்களை செய்துவரும் வடசென்னை இளைஞன் சோக்குவிற்கு பெரிய திருட்டு, கொலை என தானும் ஒரு தாதாவாக வேண்டும் என்பது தான் லட்சியம்(??).. இந்த லட்சியத்தை அவனுக்கு ஊட்டி வளர்த்ததே அவனது அம்மாதான். சோக்குவே தான் வாழ்வு என அவனை நினைத்து உருகுகிறாள் ஜெயா.

ஆனால் அவனோ ஜெயாவையும் அவளது தோழியைப்போலவே பயன்படுத்தியதும் ஒதுக்குகிறான். தனக்கு நல்லது கெட்டது சொல்லும் ஏரியாவின் சீனியர் தாதாவான ரங்காவை ஒதுக்கிவிட்டு, பணம் தந்து ஆட்களை கொலைசெய்ய சொல்லும் சேட்டுவிற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறான் சோக்கு.. பின்னாளில் சேட்டுவையே போட்டுத்தள்ளிவிட்டு தாதாவாக மாறுகிறான் சோக்கு.

ஆனால் அதன்பின் தான் நினைத்தபடியெல்லாம் நடக்கும் என சோக்குவின் முன்னால் காட்சிகள் மாறுகின்றன. போலீஸ் சோக்குவிற்கு வலைவீசுகிறது.. சோக்கு தப்பித்தானா என்பது க்ளைமாக்ஸ்..

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்கிற எம்.ஜி.ஆர் பாடல் தான் முழுப்படத்தின் கதையும். அதற்கு ரவுடியிச முலாம் பூசியிருக்கிறார் அறிமுக இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.

பெண்கள் விஷயத்தில் செம ஷோக்கு பார்ட்டியாகவும், ரவுடித்தனத்தில் படா கில்லாடியாகவும் படம் முழுக்க சோக்கு கேரக்டரில் படுபாவியாக வாழ்ந்திருக்கிறார் புதுமுகநாயகர் சதீஷ் ராவண். நடிப்பிற்காக தோற்றம், உடல்மொழி என மெனக்கெட்டிருந்தாலும் அதுவே ஓவர் டோசாகி அயர்ச்சியை தருகிறது.

மோசமானவன் என தெரிந்தும் சதீஷ் ராவணை காதலித்து, திருமணமாகமலேயே அவரது வாரிசை பெற்றெடுத்து வளர்த்தபடி காத்திருக்கும் மீனவப்பெண் காதலி ஜெயாவாக டெல்னா டேவிஸ் மிகவும் யதார்த்தமாக, வட சென்னை மீனவ பெண்ணாக செம கச்சிதம். ரஞ்சித்தின் கதாபாத்திரம் ஏதோ செய்யப்போகிறது என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் தந்திருக்கிறது.

சிறையில் ஒத்த குத்து தத்துவப் பாட்டுக்கு வந்து போகும் பவர் ஸ்டார் சீனிவாசன், சேட்டைக்கார சேட்டாக வரும் தருண் மாஸ்டர், தன் பெண்ணுக்கு அந்த குப்பத்திலேயே நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என அல்லாடும் நாயகியின் குடிகார தந்தையாக வரும் யோகி தேவராஜ், நாயகரின் ரவுடி சகாக்களாக வரும் நண்பர்களும் அந்த ஏரியாவின் அழுக்கு மூட்டைகளாக நாயகருடன் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர் .

தன் ஒற்றை பிள்ளையை நல்வழிப்படுத்த வீட்டை விட்டே போகும் ரஞ்சித்தின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி, படிப்பு வந்தும் பள்ளிக்கு பிள்ளையை அனுப்பாத கஞ்சா விற்கும் நாயகரின் அம்மாவாக வரும் டான்ஸ் மாஸ்டர் ஆகிய அனைவரும், யதார்த்தமாக நடித்துள்ளனர்

ஜி.ஏ.சிவசுந்தரின் ஒளிப்பதிவில் , ஒவ்வொரு காட்சியும் இது ஒரு சிறிய பட்ஜெட் படமென்பதையெல்லாம் தாண்டி சிறப்பாக ஒளிர்ந்திருக்கிறது உயிரோட்டமான ஒவியப்பதிவு என்றே சொல்லலாம்.. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் மிரட்டல். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஜம்ப் ஆகும் காட்சிகள் நம்மை சோதிக்கின்றன.

அறிமுக இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு சில குறைகளும், குளறுபடிகளும் படத்தில் ஆங்காங்கே தெரிகின்றன. இருந்தாலும் அழுக்கு சென்னையிலும் கல்வி பற்றி அழகான மெஸேஜ் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.

AakkamSathish RavanSrikanth DevaVeludoss gnanasambanthamசதீஷ் ராவண்வேலுதாஸ் ஞானசம்பந்தம்ஸ்ரீகாந்த் தேவா