நடிகர்கள் : சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு :
தயாரிப்பு : மதிழகன்
இயக்கம் : யு.ஆர்.ஜமீல்
பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. குற்றவாளியை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையில் ஈடுபட்டு வர, ஹன்சிகாவின் மகளும் கடத்தப்பட, ஹன்சிகா காவல்துறையின் உதவியை நாடுகிறார். கடத்தப்பட்ட சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாரா? இல்லையா?, பெண் பிள்ளைகள் கடத்தல் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஹன்சிகா, சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு மஹா மட்டமான படத்தை யாராலும் கொடுக்க முடியாது. படம் சரியில்லை என்பதும், கதை அல்லது திரைக்கதை சரியில்லை என்பதும் வேறு, ஆனால், இந்த படத்தில் எதுவும் சரியில்லாதது தான் பெரும் சோகம்.
மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த சிம்பு, சிறப்பு தோற்றம் என்ற பெயரில் தனது இமேஜை டேமஜ் செய்துக்கொண்டிருக்கிறார். ஹன்சிகாவுடனான அவருடைய காதலிலும் சரி, அவர் வரும் காட்சிகளும் சரி படத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தரவில்லை.
முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா, நடிப்பது தான் நடிப்பு என்ற முடிவில் அவரது காட்சிகள் ஓகே செய்யப்பட்டிருக்கிறது போல. குழந்தை காணாமல் போன பிறகு அவர் பரிதவிக்கும் போது படம் பார்ப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அதேபோல், ஹன்சிகாவின் மகளாக நடித்திருக்கும் மானஸ்வி, ஹன்சிகாவின் மகள் என்று சொல்வதை காட்டிலும் அவருடைய வளர்ப்பு மகள் என்று சொன்னால் தான் நம்புவது போல் இருக்கிறது. இருவருக்கும் அம்மா, மகள் பொருத்தமே இல்லாதது படத்தின் மற்றொரு வருத்தம்.
ஸ்ரீகாந்த், தம்பி ராமையா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் ஆகியோரது நடிப்பு சீரியல் பாணியில் இருக்கிறது. அதிலும், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், வரும் காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கிறது. தம்பி ராமையாவின் ஓவர் ஆக்டிங் அதைவிட காமெடி.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே சுமார் ரகம்.
ஒரு கதையை எப்படி எல்லாம் சொதப்ப கூடாதோ அப்படி எல்லாம் சொதப்பியிருக்கிறார் இயக்குநர் யு.ஆர்.ஜமீல். படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை, படம் முழுவதும் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் கதை தாறுமாறாக நகர்வதோடு, படம் பார்ப்பவர்களுக்கு தலைவலியையும் கொடுக்கிறது.
மொத்தத்தில், ‘மஹா’ மண்டைவலி
ரேட்டிங் 2/3