’ஜங்கிள் குரூஸ்’ விமர்சனம்

நடிகர்கள் : டிவைனே ஜான்சன், எமிலி ப்ளண்ட், எட்கர் ராமிரெஸ் மற்றும் பலர்
இசை : ஜேம்ஸ் நியூட்டன் ஹவர்ட்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
இயக்கம் : ஃபிளவியோ மார்ட்டினஸ் லாபியனோ
தயாரிப்பு : ஜான் டேவிஸ், ஜான் ஃபாக்ஸ், பேயு ஃப்ளைன், டிவைனே ஜான்சன், டேனி கார்சியா, ஹிரம் கார்சியா

அமேசானின் காடுகளில் மிக ஆபத்து நிறைந்த பகுதியில் மலரும் அதிசய மலரை தேடி நாயகி எமிலி ப்ளண்ட் செல்கிறார். அவருக்கு கேப்டனான நாயகன் டிவைனே ஜான்சன் உதவி செய்ய, அதே மலரை தேடி வில்லன் கோஷ்ட்டியும் அமேசான் காட்டுக்குள் வர, இரு தரப்பில் யார் அந்த மலரை கைப்பற்றினார்கள், அதன் பின்னணி என்ன? என்பதை ஆக்‌ஷன் மற்றும் அட்வெஞ்சரோடு சொல்வது தான் ‘ஜங்கிள் குரூஸ்’.

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பேவரைட் மல்யுத்த நாயகனான ராக் என்கிற டிவைனே ஜான்சன், கதாநாயகனாக அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபடுவதோடு, பல சாகசக் காட்சிகளிலும் நடித்து அசத்துகிறார். ஆதிவாசிகளின் சாபத்தால் சுமார் 400 வருடங்களாக அமேசான் காட்டில் இருந்து வெளியேற முடியாமல் இருக்கும் டிவைனே ஜான்சனின் பின்னணி பகீர் கிளப்புகிறது.

நாயகனுக்கு நிகராக சாகசக் காட்சிகளில் கலக்கியிருக்கும் நாயகி எமிலி ப்ளண்ட், கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார். எமிலியின் தம்பியாக நடித்திருக்கும் எட்கர் ராமிரெஸின் கதாப்பாத்திரம் சிரிக்க வைக்கிறது.

பாம்புகள் நிறைந்த உடல், தேன் ஒழுகும் உடல், சகதியான உடல், என பழங்குடியின மக்களின் சாபத்தால் அமேசான் காட்டில் சிறைபட்டு கிடக்கும் போர் வீரர்கள், அமேசான் ஆற்றில் இருக்கும் சிவப்பு டால்பீன்கள், நீர்மூழ்கி கப்பலிடம் இருந்து தப்பிக்கும் ஹீரோவின் சாகசம், தண்ணீரில் மூழ்கியிருக்கும் கட்டிடம் என சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் படத்தில் பல சுவாரஸ்யங்களை வைத்திருக்கும் இயக்குநர் படத்தை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளின் பிரம்மாண்டத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதே சமயம், கலை இயக்கம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஹாலிவுட் படங்களுக்கான தரத்தோடும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

டிஸ்னி நிறுவனத்தின் படம் என்றாலே சிறுவர்களை மையப்படுத்திய படமாக தான் இருக்கும். இப்படமும் அதே ஜானர் படம் என்றாலும், பெரியவர்களும் ரசிக்கும் வகையில், திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ’ஜங்கிள் குரூஸ்’ அமர்க்களம்.

hollywood movie jungle cruisejungle cruise reviewkollywood reviewtamil movie review