’கடைசீல பிரியாணி’ விமர்சனம்


நடிகர்கள் : வசந்த் செல்வம், விஜய் ராம், ஹக்கீம் ஷாஜகான், தினேஷ் மணி மற்றும் பலர்
இசை : ஜுடா பவுல், நீல் செபஸ்டியன், வினோத் தணிகாசலம்
ஒளிப்பதிவு : ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் மொஹமத்
இயக்கம் : நிஷாந்த் களிதிண்டி
தயாரிப்பு : எஸ்.சசிகாந்த், சக்ரவர்த்தி ராமச்சந்திரா, நிஷாந்த் களிதிண்டி

மூன்று சகோதரர்கள் தங்களது அப்பாவை கொலை செய்த நபரை பழிவாங்குவதற்காக கேரளாவில் உள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு அந்த நபரை தேடி பிடித்து கொலை செய்துவிட்டு, வெற்றி களிப்போடு ஊருக்கு திரும்பும் போது, எதிர்பாரத சம்பவத்தால் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் செல்வம், விஜய் ராம், தினேஷ் மணி, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் நாயகனாக வலம் வரும் வசந்த் செல்வம், அழுத்தமான நடிப்பால் அமர்க்களப்படுத்த, இரண்டாம் பாதி முழுவதையும் விஜய் ராம் மற்றும் ஹக்கீம் ஷாஜாகன் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்கிறார்கள். இயல்பான நடிப்பு மூலம் ரசிகார்களை விஜய் ராம் கவர, திமிரான நடிப்பு மற்றும் கொடூரமான வில்லத்தனத்தால் ஹக்கீம் ஷாஜகான் கவனிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் ஜெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் அஷீம் மொஹமத் ஆகியோரது கடுமையான உழைப்பு திரையில் பிரகாசிக்கிறது.

இசையமைப்பாளர் வினோத் தணிகாசலத்தின் பின்னணி இசையும், இசையமைப்பாளர்கள் ஜுடா பவுல் மற்றும் நீல் செபஸ்டியன் ஆகியோரது பாடல்கள் மற்றும் கூடுதல் இசை குறையில்லை.

ஒரே லொக்கேஷனில், ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால், படத்தில் சில ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கும் இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி. நம்ப முடியாத சில சம்பவங்களை வைத்து விதியின் விளையாட்டு என்று காட்சிகளை முடித்திருப்பது சலிப்படைய செய்கிறது.

இருந்தாலும், பழைய பழிவாங்கும் பார்முலா கதையை, பிளாக் காமெடி ஜானரில், வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநரின் கதாப்பாத்திர தேர்வு, அதில் நடித்த நடிகர்கள், கதை நடக்கும் இடம், காட்சியமைப்புகள் மற்றும் மேக்கிங் ஆகியவை ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில், பழைய சோறாக இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ருசியான உணவாகவே இருக்கிறது இந்த ‘கடைசீல பிரியாணி’.

director nishanth kalithindikadaseela biriyani film reviewkadaseela biriyani reviewkollywood movie reviewSashikanthtamil movie kadaseela biriyanivijay sethupathi in kadaseela biriyani