திரையுலகில் நடைபெற்றுவரும் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த மார்ச்-16 முதல் திரைப்படங்களின் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. அதனால் நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்கிறார்கள்.. பிடித்த வேலையை செய்து வருகிறார்கள்..
அந்தவகையில் நடிகர் கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள வேணுகோபால் என்பவரின் விளைநிலங்களுக்கு சென்று இயற்கை விவசாய முறைகளை பார்வையிட்டு பல தகவல்களை அறிந்துகொண்டு வந்துள்ளார்.
“இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையான காற்று , அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்” என கூறியுள்ளார் கார்த்தி.
.
அதுமட்டுமல்ல நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். கார்த்தி தற்போது பாண்டிராஜ் டைரக்சனில் நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் விவசாயம் சார்ந்த பின்னணியில் தான் உருவாகி வருகிறது.
மெக்கானிக்கல் இஞ்சினீயரான வேணுகோபால் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.