சதுரஅடி 3500 என்கிற படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.. ரியல் எஸ்டேட் பின்னணியில் சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என எல்லா அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்ட கமர்சியல் எண்டர்டெயினர் தான் இந்த சதுர அடி 3500.
அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தில் ரகுமான் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜாய்சன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகன் நிகில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏராளமான திருப்பங்களுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக தயாராகியிருக்கிறது. இனியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
படத்தினை வெளியிடும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராகுல் பேசுகையில், “இதற்கு முன் நான் இயக்கிய மூன்று படங்களுக்கு நான் தான் தயாரிப்பாளர். நான் தான் இயக்குநர். அந்த படங்கள் எதுவும் நட்டமில்லை. இந்நிலையில் இந்த படத்தை அண்மையில் பார்த்தேன். ரசித்தேன். அதனால் இப்படத்தை நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். இப்படத்தின் டைட்டில் ரசிகர்களை கவரும் வகையிலும், கதைக்கு ஏற்ற வகையிலும் இருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்கிறேன். இந்த படவிழாவிற்கு நடிகை இனியா கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் ஒரு படவிழாவில் அப்படத்தின் நாயகி கலந்து கொண்டால் அது குறிப்பிட்ட வகையில் படத்தை விளம்பரப்படுத்தும். இதற்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு நடிகை இனியாவிற்கு இருக்கிறது..’ என்றார்.
இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில், “இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். ஆனால் நடிகை இனியா இப்படவிழாவில் கலந்துகொள்ளாததால் நஷ்டம் அவருக்குதானே ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று ஒரு வசனம் எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார் பாக்யராஜ்.
மேலும் எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது” என்கிற ஆலோசனையையும் கூறினார்.
முன்னதாக இந்த விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை நடிகர் அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார். இதைக்கண்டு நெகிழ்ந்த பாக்யராஜ், “நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும்போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்” என வாழ்த்தவும் செய்தார்..

Comments are closed.