
இனிமே இப்படித்தான் என தில்லாக அறிவித்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானத்தின் புதிய படம் தான் இந்த ‘தில்லுக்கு துட்டு’. இது அவரது ஹீரோ இமேஜை எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது..? பார்க்கலாம்.
சென்னைப்பையன் சந்தானம். சின்னவயதிலேயே அவரை லவ் பண்ணி பிரிந்துபோய், பின்னாளில் அவரை தேடி கண்டுபிடிக்கிறார் சேட்டு வீட்டு பெண்ணான ஷனயா.. காதல் புத்துயிர் பெற, காதலுக்கு எதிர்ப்பு காட்டுகிறார் ஷனயாவின் சேட் அப்பா.. மகளின் காதலை பிரிக்க, சந்தானத்தை கொலைசெய்ய திட்டமிட்டு, அதற்காக நான் கடவுள் ராஜேந்திரனிடம் செல்கிறார்.
சந்தானத்தை நூதனமாக கொல்ல ராஜேந்திரன் கொடுத்த திட்டப்படி, மலைப்பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் திருமணத்தை நடத்தலாம் என சந்தனாத்தின் குடும்பத்தையும் தனது குடும்பத்தையும் மட்டும் அழைத்து செல்கிறார் சேட்ஜி.. போன இடத்தில் பேய் பயம் காட்டி சந்தானத்தை கொல்ல முயற்சிக்கும் வேளையில், உண்மையிலேயே அங்கே அதுநாள்வரை அடக்கிவைக்கப்பட்டு இருந்த பேய் ஒன்று வீறுகொண்டு எழுகிறது. முடிவு காமெடியா..? திகிலா என்பதை தியேட்டருக்கு போய் பார்ப்பதுதான் சுவாரஸ்யம்..
ஹீரோவாக மாறியபின் பாடி லாங்குவேஜ், பைட், டான்ஸ் என முந்தைய படத்தைவிட இதில் நிறைய டெவலப்மெண்ட் ஆகியிருக்கிறார் சந்தானம்.. விஜய் ரேஞ்சுக்கு ஸ்டெப்ஸ் போடுவதுடன், விஜயகாந்த் ரேஞ்சுக்கும் லெக் பைட்டில் பின்னுகிறார்.. ரொமான்ஸ் ஏரியாவிலும் லிப் லாக் கிஸ் அடித்து ஸ்கோர் பண்ணுகிறார். காமெடி ஒன்லைனர்களை வீசும்போதுதான் அவர் நகைச்சுவை நடிகராக இருந்தார் என்கிற ஞாபகமே வருகிறது. பேய்களையே ‘பேய்க்கலாய்ப்பு’ கலாய்த்திருக்கிறார் சந்தானம்.
காதலும் கவர்ச்சியுமாக ஜாடிக்கேத்த மூடியாக சந்தானத்துக்கு பிட் ஆகிறார் நாயகி ஷனயா. அவரது அப்பாவாக வரும் சேட்ஜி காமெடி கலந்த வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். சந்தானத்தின் தந்தையாக ஆனந்தராஜ் குறைந்தபட்சம் இருபது இடங்களிலாவது நம்மை சிரிக்கவைக்கிறார். நறுக்கு தெறித்தாற்போல கருணாஸின் காமெடியும் கைகொடுத்துள்ளது.
இவர்களை தாண்டி நான் கடவுள் ராஜேந்திரனின் பங்கு அலாதியானது.. பேய் செட்டப்பை உருவாக்குவதும் அதை டைமிங்காக மெயின்டைன் பண்ணுவதில் சொதப்புவதுமாக ஜமாய்த்திருக்கிறார் மனிதர். அசத்தலான லொக்கேஷனில் அமைந்திருக்கும் அந்த பேய் பங்களாவும் நம்மை ரசிக்க வைக்கிறது. சின்னத்திரையில் சந்தானத்தின் குருநாதராக இருந்து அவரை வளர்த்துவிட்டவரான இயக்குனர் ராம்பாலா, வெள்ளித்திரையிலும் அவருக்கு தோதான கதையை செலக்ட் பண்ணி மேட்ச் வின்னர் ஆகியிருக்கிறார்..
தில்லுக்கு துட்டு – கொடுக்கிற துட்டுக்கேற்ற படம்
Comments are closed.