நடிகர் கலாபவன் மணி காலமானார்..!

222

Kalabhavan-Mani
மலையாள திரையுலகை சேர்ந்தவரும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவருமான நடிகர் கலாபவன் மணி இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 45 மட்டுமே.. சமீபத்தில் தான் நடிகை கல்பனா, இயக்குனர் ராஜேஷ் பிள்ளை போன்ற பிரபலங்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி மலையாள திரையுலகை அதிர்ச்சியில் தள்ளினார்கள்.. அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கலாபவன் மணியின் மரணம் அமைந்துள்ளது..

கல்லீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வந்த கலாபவன் மணி, நேற்று நோயின் தீவிரத்தால் கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று இரவு 7 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.. இது மலையாள திரையுலகையும் கேரள மக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது..

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ‘வசந்தியும் லட்சுமிக்குட்டியும் பின்னே ஞானும்’ என்கிற படத்தில் கண் பார்வையற்றவராக நடித்து பல விருதுகளை அள்ளியதுடன் கதாநாயகன் அந்தஸ்தும் பெற்றார் கலாபவன் மணி. இந்தப்படம் தான் பின்னாளில் தமிழில் விக்ரம் நடிக்க ‘காசி’ என்கிற பெயரில் வெளியானது..

இயக்குனர் சரண் தமிழில் கலாபவன் மணியை தான் இயக்கிய ‘ஜெமினி’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.. அதன்பின் நிறைய தமிழ்ப்படங்களிலும் நடித்தார் கலாபவன் மணி. அவரது மரணம் ரசிகர்களுக்கும் கலாபவன் மணியை நேசிப்பவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை. அவரது மறைவுக்கு நமது behind frames ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.