எலி – விமர்சனம்

306

 

பணம், நகை திருட்டுக்களை தந்திரமாக செய்துவரும் எலிச்சாமியை (வடிவேலு)போலீஸ் வேலை தருவதாக ஆசைகாட்டி, ரகசிய உளவாளியாக மாற்றுகிறார் போலீஸ் அதிகாரி ஆதித்யா.. அவரின் ஆலோசனைப்படி வடிவேலுவும் கடத்தல் மன்னன் பிரதீப் ராவேத்தின் ஏரியாவுக்குள் நுழைந்து அவரின் நன்மதிப்பை பெறுகிறார்.

வெளிநாட்டில் இருந்து சிகரெட் கடத்தும் கும்பலுடன் டீலிங் முடித்து சரக்கை இறக்க, நாள் குறிக்கிறார் பிரதீப். ஆனால் இந்த தகவல் போலீஸுக்கு தெரியவர, இதற்கு மூல காரணம் வடிவேலு தான் என்பதை கண்டறிகிறார் பிரதீப். இறுதியில் போலீஸ் வர, முடிவு சுபம்..

எம்.ஜி.ஆர் காலத்து கதை மாதிரி தெரிகிறதே என்றுதானே நினைக்க தோன்றுகிறது. உண்மையும் அதுதான். 196௦களில் நடக்கும் கதை என ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் எந்த ஒரு விஷயத்திலும் லாஜிக்கே பார்க்க முடியவில்லை..

வடிவேலு உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார் தான். ஆனால் அதற்கேற்ற ஒரு வலுவான கதையோ, சாதுர்யமான திரைக்கதையோ இல்லையே. வடிவேலு அவரது வழக்கமான கூட்டாளிகளுடன் திருடும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும் அதேவேளையில், அவரது சோலோ காமெடி எடுபட மறுக்கிறது.

சதாவுடன் அளவான ரொமான்ஸ் மட்டும் காட்டியிருப்பதில் ஒரு வடிவேலுவிடம் ஒரு ஜாக்கிரதை தெரிகிறது. இந்தி டூயட்டில் சதாவுடன் வடிவேலு போடும் ஆட்டம், போக்கிரியில் ‘சுட்டும் விழிச்சுடரே’ பாடலுக்கு அசினுடன் போடும் ஆட்டத்துக்கு முன்னால் நிற்கவே முடியவில்லை. ரொம்ப சுமார்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப நல்ல போலீஸ் அதிகாரியாக வரும் ஆதித்யா மனதில் நிற்கிறார். காமெடி கலந்த பிரதீப்பின் வில்லத்தனமும் அவரது அடியாட்களின் கலாட்டாவும் பரவாயில்லை. அநியாயத்திற்கு மொட்டை ராஜேந்திரனை இப்படியா வேஸ்ட் செய்வது..?

1960 காலகட்டம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு பிரேமிலும் காட்ட சிரத்தையாய் உழைத்திருக்கும் இயக்குனர் யுவராஜ் தயாளன், திரைக்கதை என்கிற விஷயத்தை அலட்சியமாக கையாண்டிருக்கிறார். வடிவேலு ஒரு காமெடியன் என்பதை மறந்து, அவரை கதாநாயகனாக மனதில் நினைத்து கதை பண்ணியிருப்பதால் நிறைய இடங்களில் சிரிப்புக்கு பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..

கதாநாயகன் என்கிற மாயையைவிட்டு வடிவேலு வெளிவரவேண்டிய நேரம் இது.

Comments are closed.