“ஹீரோயின் தேவையில்லை” – ரஞ்சித்துக்கு ரஜினியின் க்ரீன் சிக்னல்..!

197

நேரம் கூடி வருவது என்கிறார்களே அது இப்படித்தான் இருக்குமோ..? சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்க போகிறார் என பட்டிமன்றம் நடத்தாத குறையாக அவரது ரசிகர்கள் விவாதித்துகொண்டிருக்க, பல இயக்குனர்கள் அவரிடம் கதைசொல்லிவிட்டு நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, அட்டகத்தி’ ரஞ்சித்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் அதை எப்படி வர்நிப்பதாம்.

நிச்சயம் இது ஒரு வரலாற்று நிகழ்வு தான்.. காரணம் இதற்கு முன் கடந்த 2௦ வருடங்களில் ரஜினியை வைத்து படம் இயக்கியவர்களில் புதிய இயக்குனர் என்றால் அது சுந்தர்.சி ஒருவர் தான். 1995ல் அறிமுகமான சுந்தர்.சிக்கு அவர் இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மாபெரும் வெற்றி, 1997லிலேயே ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கித்தந்து.

அதன்பிறகு சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், பி.வாசு, இவர்கள் டைரக்ஷனில் மட்டும் மாற்றி மாற்றி நடித்த ரஜினி, இப்போது மீண்டும், அவரைப்பொறுத்தவரையில் புதிய, அதேசமயம் துடிப்பான இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது அபூர்வ நிகழ்வுதான். சௌந்தர்யா ரஜினியின் மகள் என்பதால் அவர் இந்தப்பட்டியலில் வரமாட்டார்.

ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் ரஜினியை ரொம்பவே கவர்ந்துவிட, அப்போதே அவரை அழைத்து பாராட்டினார். அந்த பாராட்டு பரிசாக மாறி, இப்போது தனது படத்தையே இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு கொடுத்துள்ளார் ரஜினி.. இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு..

ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்து அந்த வாரத்தையை ரஜினிக்கு மட்டுமே சொந்தமாக்கிய கலைப்புலி தாணு, இப்போது ரஜினியின் படத்தையே தயாரிப்பது எவ்வளவு பொருத்தமானது. அதுமட்டுமல்ல, “தயாரிப்பாளர் தாணு என்னுடைய நீண்ட கால நண்பர். அவருக்கு நான் செய்ய வேண்டிய உதவிகள் நிறைய இருக்கிறது. அவரைப் போய் பாருங்கள். அவர் தான் தயாரிப்பாளர்” என ரஜினியே ரஞ்சித்திடம் சொல்லி அனுப்பினாராம்.

மொத்த படப்பிடிப்பு 9௦ நாட்கள் நடைபெறும் என்றாலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை 45 நாட்களிலேயே படமாக்கிவிட திட்டமிட்டுள்ளாராம் ரஞ்சித். படப்பிடிப்பு மலேசிய பின்னணியில் நடைபெற இருப்பதாகவும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக யாரும் இல்லை என்பதும், அதற்கு ரஜினி டபுள் ஒகே சொல்லிவிட்டார் என்பதும் உபரி தகவல்.

Comments are closed.