‘ஜெடூசி’ திரைப்பட விமர்சனம்

7

நடிகர்கள் : ஸ்ரீதர், ஸ்வேதா, ஹீரோயின், சினி யுதன், அர்ஜுனன், பாவா செல்லதுரை, ஜெயந்திமாலா, ஏ.வெங்கடேஷ், அருவி மதன், அசோக் பாண்டியன்
இசை : விக்னேஸ்வரன்
ஒளிப்பதிவு : நாகஅர்ஜுன் V.S
இயக்கம் : நட்ராஜ் ஏகாம்பரம்
தயாரிப்பு : நட்ராஜ் ஏகாம்பரம் விஜயசாந்தி ஸ்ரீதர்

மர்மங்களும் பழிவாங்கும் உணர்வுகளும் பின்னிப் பிணையும் கதையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கொடூர முகத்தைப் பதிவு செய்கிறது ‘ஜெடூசி’.

கணினி, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைச் சரிசெய்யும் பணியில் நண்பர் பிளாக் பாண்டியுடன் ஈடுபட்டு வருகிறார் ஸ்ரீதர். இவர் வேலை பார்க்கும் பகுதிக்கு அருகில் செயல்படும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகள் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்படுகிறார்கள். தொடர்ந்து கல்லூரி முதல்வர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைப் பழியைப் பேராசிரியை ஒருவர் மீது சுமத்தி, அவரைத் தற்கொலைக்குத் தள்ளும் அளவுக்கு குற்றவாளி தனது திட்டத்தை அரங்கேற்றுகிறார்.

ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தைச் சுற்றியே தொடர்ந்து நடைபெறும் இந்தச் சம்பவங்களால் காவல்துறை குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாகிறது. கல்லூரியின் நிறுவனர் ஏ.வெங்கடேஷும் உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறார். இந்தத் தொடர் குற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அவர் ஏன் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்? ஸ்ரீதரின் வாழ்க்கைக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற மர்மங்களை அவிழ்க்கிறது திரைக்கதை.

ஸ்ரீதர், நாயகனாக தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான உடல்மொழியையும் நடிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பழங்குடியின இளைஞராகவும், தொழில்நுட்பப் பணியாளராகவும் வேறுபட்ட தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் துடிப்பைக் காட்டுபவர், குடும்பப் பாசம் சார்ந்த உணர்ச்சிகரமான தருணங்களில் நிதானமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஸ்வேதா, பழங்குடியினப் பெண்ணாக கதாபாத்திரத்துடன் ஒன்றிப் பயணித்திருக்கிறார். குறிப்பாக, வலியும் வேதனையும் வெளிப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு கதைக்கு உணர்ச்சிகரமான வலிமையைக் கொடுக்கிறது.

சினி யுதன் ஏற்றிருக்கும் மற்றொரு நாயகி கதாபாத்திரம் கதையின் போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கேற்ப தனது நடிப்பை அளவோடு வெளிப்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்.

பிளாக் பாண்டி, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதையின் உணர்வுகளுக்கும் துணை நிற்கும் வகையில் நடித்திருக்கிறார். சிரிப்பூட்டும் காட்சிகளில் தனது வழக்கமான பாணியைக் காட்டுபவர், குணச்சித்திரப் பாத்திரத்திலும் திருப்திகரமான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

பாவா செல்லதுரை, ஜெயந்திமாலா, ஏ.வெங்கடேஷ், அருவி மதன், அசோக் பாண்டியன் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்ந்த கதாபாத்திரங்கள் கதையின் விசாரணைப் பின்னணிக்கு நம்பகத்தன்மை சேர்க்கின்றன.

நாகர்ஜுன்.வி.எஸ். மேற்கொண்டிருக்கும் ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. வனப்பகுதிகள், மலைப்பாதைகள் எனப் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் கதையின் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் தேவையற்ற பகட்டைக் குறைத்து இயல்பான தன்மையைப் பின்பற்றியிருக்கிறார். அதேபோல், கதாபாத்திரங்களின் முகபாவனைகளிலும் அவர்களுக்குள் புதைந்திருக்கும் வேதனைகளிலும் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் வகையில் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்.

விக்னேஸ்வரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் மனநிலைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. காட்சிகளின் உணர்வுகளை உயர்த்துவதிலும், திரைக்கதையின் வேகத்திற்கு துணை நிற்பதிலும் இசை தனது பங்கைச் செய்திருக்கிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கி இயக்கியிருக்கும் நட்ராஜ் ஏகாம்பரம், சிக்கலான கதைக்கருவை எளிய அணுகுமுறையில் சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், அதனால் பாதிக்கப்படும் பெண்களின் உளவியல் பாதிப்புகளையும் அழுத்தமான காட்சிகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார். குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்றாலும், அவர்களின் செயல்களுக்கான விளைவுகளை ஒருநாள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கருத்தையும் கதையின் வழியாக முன்வைக்கிறார்.

படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘ஜெடூசி’ என்ற பொருளை வெறும் பின்னணிப் பொருளாகக் கடந்து செல்லாமல், கதையின் முக்கிய அம்சமாக இயக்குநர் பயன்படுத்தியிருப்பது சுவாரஸ்யமான முயற்சி. அந்தப் பொருளைச் சுற்றி சில காட்சிகளை அமைத்திருப்பதுடன், கிளைமாக்ஸிலும் அதற்குப் பொருத்தமான இடத்தை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேட்டிங் 3.2/5

Comments are closed.