‘கட்டா குஸ்தி 2’ விமர்சனம்

12

நடிகர்கள் : விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவு : கே.எம்.பாஸ்கரன்
இயக்கம் : செல்லா அய்யாவு
தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – டாக்டர் ஐசரி கே.கணேஷ், விஷ்ணு விஷால்

குழந்தை பிறந்த பிறகு தன்னால் பழையபடி குஸ்தி விளையாட்டில் பங்கேற்க முடியாது என்று ஐஸ்வர்யா லட்சுமி கவலைப்படுவதும், அவரது கணவர் விஷ்ணு விஷால், அவருக்கு நம்பிக்கையளித்து, ஊக்கமளிக்கும் விதத்தி முதல் பாகம் முடிவடையும். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில், மனைவியை எப்படியாவது தேசிய சாம்பியனாக்கி விட வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் கணவர் விஷ்ணு விஷால், குழந்தை மற்றும் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மனைவியின் வெற்றிக்கு பக்கபலமாக பயணிக்கிறார்.

கணவரின் இப்படிப்பட ஒத்துழைப்பால் குஸ்தி போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறும் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, குழந்தை வளர்ப்பில் கணவன் – மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மூன்றாவது மனிதரின் யோசனையை கேட்டு விஷ்ணு விஷால் செய்யும் ஒரு விசயம், ஐஸ்வர்யா லட்சுமியின் கனவை சிதைத்து விடுவதோடு, அவரால் குஸ்தி போட்டிகளில் பங்கேற்க முடியாதபடி செய்து விடுகிறது.

தனது இத்தகைய நிலைக்கு தனது கணவரின் ஆண் என்ற கெளர்வம் தான் காரணம், என்று நினைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அவரை விட்டு பிரிய முடிவு செய்கிறார். நடந்ததை சொல்லி மனைவியின் மனதை மற்றி மீண்டும் பழையபடி சேர்ந்து வாழ முயற்சிக்கும் விஷ்ணு விஷால், அதில் வெற்றி பெற்றாரா?, ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

விஷ்ணு விஷால் படம் முழுவதும் வேட்டி, சட்டை என்று கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறார். மனைவியின் வெற்றிக்காக, ஆண்கள் செய்ய தயங்கும் அனைத்தையும் செய்யும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, தாய்குலங்களின் மனதில் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுக்கும். பாசமான அப்பா, பொறுப்பான கணவராக வலம் வரும் விஷ்ணு விஷால், டீச்சருடன் ஆட்டம் போடும் காட்சி அதிரிபுதிரியாக இருப்பதோடு, திரையரங்கையே அதிர வைக்கிறது.

ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் குஸ்தி வீராங்கனையாகவும், அழகான மற்றும் அன்பான மனைவியாகவும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிகர்களை அசரடிக்கிறது. கணவருடனான கூடல் பாடலிலும் சரி, குஸ்தி போட்டியிலும் சரி, மனைவியாக அசத்தியிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, நடிப்பில் அதிகப்படியாக ஸ்கோர் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சாரா, ஆயிரம் வாலா பட்டாசு போல் வெடிக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்தும் கியூட்டாகவும், பியூட்டியாகவும் இருப்பதால், அவருக்காகவே படத்தை இரண்டாவது முறை பார்த்தாலும் தப்பில்லை என்றே தோன்றுகிறது.

முனிஷ்காந்த், காளிவெங்கட், கருணாகரன் ஆகியோர் குணச்சித்திர நடிகர்களாகவும், காமெடி நடிகர்களாகவும் ஜொலிப்பார்கள் என்பது தெரிந்தது தான். ஆனால், குணச்சித்திர நடிகராக மட்டுமே கவனம் ஈர்த்த கஜராஜ் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் காமெடி கிடா வெட்டி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

கருணாஸ் முதல் பாகத்தைப் போலவே இதிலும், ஆண் கெளரவத்தையும், பெண்களை அடக்கி ஆள்வதன் முக்கியத்துவத்தையும் பேசி, கஞ்சி போட்ட சட்டைப்போல் விரப்பாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் எதிர்பாரத சம்பவங்களால் ரசிகர்கள் கண்களில் தண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைக்கிறார்.

டீச்சராக நடித்திருக்கும் மோக்‌ஷா, சீவ்லெஷ் ஜாக்குடன் வலம் வருவதால், என்னமோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்க வைத்தாலும், அப்படி எல்லாம் எதையும் செய்யாமல் நாகரீகமாக தலைகாட்டி மறைவது படத்திற்கு நன்மை சேர்த்திருக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு, இறுதியில் வந்தாலும் தங்களது பணியை நிறைவாக செய்து சிறிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கார், திரைக்கதையில் இருக்கும் கலகலப்பையும், மகிழ்வான சூழ்நிலைகளையும், ரசிகர்களிடத்திலும் கடத்தும் விதத்தில் காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார். ஷான் ரோல்டானின் இசையில் “சம்பவக்காரி..” திரும்ப திரும்ப கேட்க வைத்து முனுமுனுக்க வைப்பது போல், அப்பா – மகள் பாடல் சிறந்த மெலொடியாக மனதை வருடுகிறது. படத்தொகுப்பாளர் பரத் விக்ரமனின் பணியிலும் குறை இல்லை.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், அதை விட கூடுதல் காமெடி காட்சிகளுடனும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் காட்சிகளுடனும் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, குடும்பத்துடன் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

இரண்டரை மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்கும்படி காட்சிகள் நகர்ந்தாலும், கணவன் – மனைவி இடையில் அவ்வபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும், அதை சரியாக கையாளமால் போனால் குடும்பத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதையும், அறிவுரையாக அல்லாமல் குடும்ப அலப்பறைகளோடு நகைச்சுவையாக சொல்லி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, குடும்பங்கள் கொண்டாடும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்ததில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 4.5/5

Comments are closed.