’மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

9

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரின் வெறித்தனமான ரசிகர்களான வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகிய மூன்று பேரும், அவர் கடைசியாக விளையாடும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கான பணத்திற்கு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று அதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையை கொண்டு சென்னை செல்ல திட்டம் போடுகிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது நடக்காமல் போக, பணத்திற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் திருடி, அதன் மூலம் டிக்கெட் வாங்கி, போட்டியை காண சென்னை புறப்படுகிறார்கள். அவர்களுடன் லாவண்யா அன்பழகனும் செல்கிறார்

நான்கு பேரும் சென்னை வந்தடைந்ததும் போட்டியை காண ஸ்டேடியத்திற்குள் போகும் போது தான் அது போலி டிக்கெட் என்பது தெரிய வருகிறது. பெருத்த ஏமாற்றமடைந்த அவர்கள், எப்படியாவது தங்களது தல விளையாடும் போட்டியை பார்த்துவிட்டு தான் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற முடிவில், மற்றொரு போட்டியை நேரில் பார்க்க திட்டமிட்டு அதற்கான பணத்தை தயார் செய்ய களத்தில் இறங்குகிறார்கள். ஆனால், அவர்களது ஒவ்வொரு முயற்சியும், ஒரு பிரச்சனையில் அவர்களை சிக்க வைக்க, அதில் இருந்து மீண்டு தாங்கள் நினைத்தது போல் தங்களது மனதுக்கு பிடித்த நட்சத்திர வீரர் விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா? இல்லையா ? என்பது தான் தொடரின் கதை.

தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான நண்பர்கள் போலவே தொடர் முழுவதும் வலம் வருகிறார்கள். உடல் மொழி, உரையாடல்கள், கோபம், சண்டை ஆகியவற்றை மூன்று நண்பர்களும் இயல்பாக கையாண்டு, அந்த அந்த கதாபாத்திரங்களாகவே பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் லாவண்யா அன்பழகன், தற்போதைய காலக்கட்டத்திலும் பெண்கள் தங்களது விருப்பப்படி வாழ முடியாமல், தந்தை, காதலன், கணவன் என்ற வெவ்வேறு பிம்பத்தில் இருக்கும் ஆண்களால் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறார்கள், என்பதை தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி ஆகியோரின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் கிராமம் மற்றும் நகரத்தின் வித்தியாசங்களை மட்டும் இன்றி, இரண்டு நிலப்பரப்புகளில் பயணிக்கும் கதாபாத்திரங்களிடமும் வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பரத் தனசேகரின் பின்னணி இசை சாதாரணமாக பயணிக்கும் காட்சிகளை கூட அசாதாரண காட்சிகளாக மாற்றி கவனம் ஈர்க்கிறது. கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் போது பின்னணி இசையிலும் வித்தியாசத்தையும், பல்வேறு பீஜிம்களையும் கையாண்டிருக்கும் பரத் தனசேகர், ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஒவ்வொரு வித்தியாசமான ஓசை மூலம் ஒட்டுமொத்த தொடருக்கும் உயிரூட்டியிருக்கிறார்.

மிக எளிமையான கதை என்றாலும், ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்து என்ன நடக்கும்?, என்ற கேள்வி பார்வையாளர்களிடம் ஏற்படும் வகையில் காட்சிகளை திருப்பங்களோடு தொகுத்திருக்கிறார் பவித்ரன்.கே. கலை இயக்குநர் பி.தமிழ்செல்வனின் பணியில் செயற்கைத்தனம் இல்லாதது பாராட்டத்தக்கது.

6 எப்பிசோட்களில் முதல் மூன்று எப்பிசோட்கள் நண்பர்களது எளிய வாழ்க்கை, அவர்களது ஆசை, கிரிக்கெட் மீதான அவர்களின் அதீத காதல் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. அடுத்த மூன்று எப்பிசோட்கள் அதே கிரிக்கெட் பின்னணியோடு இருந்தாலும், இதுவரை நாம் பார்த்திராத அல்லது விபரமாக அறிந்திராத கிரிக்கெட் சூதாட்ட உலகத்தை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் நட்சத்திரங்களை கொண்டாடும் இளைஞர்கள் அவர்களை பின் தொடரலாம், ஆனால் அவர்கள் மீது பித்துப்பிடித்து அலையக்கூடாது, என்ற கருத்தை ஜாலியாக சொல்லியிருக்கும் இந்த தொடரின் திரைக்கதை முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டிருப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டின் துள்ளியமான தகவல்கள் மற்றும் கிரிக்கெட் போட்டியை வைத்து நடத்தப்படும் சூதாட்டம் பற்றிய் விவரங்கள் என அனைத்தையும் மிக தெளிவாகவும், உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறது.

ரேட்டிங் 4/5

Comments are closed.