‘அனந்தன் காடு’ விமர்சனம்

18

நடிகர்கள் : ஆர்யா, நிகிலா விமல், ரெஜினா கசாண்ட்ரா, இந்திரன்ஸ், சுனில், சித்திக், அஜய், தேவ் மோகன், போஸ் வெங்கட், ரெஞ்சி பனிக்கர், அஞ்சலி பி.நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யூத் குமார், விஜயராகவன்
இசை : பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு : எஸ்.யுவா
இயக்கம் : ஜியென் கிருஷ்ணகுமார்
தயாரிப்பு : மினி ஸ்டுடியோஸ் – எஸ்.வினோத் குமார்

தமிழீழப் போராளியான ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பித்து கேரளாவில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் பதுங்குகிறார். அங்கிருக்கும் குற்றப் பின்னணி கொண்ட முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத் ஆகியோர் ஆர்யா பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ளாமல் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர்.

கேரள முதல்வர் தன் அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக, காவல்துறை உயர்அதிகாரி சுனில் மூலம், குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவை பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே, தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பெரும் செல்வாக்கு மிக்க ஒருவர் தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக உருவெடுத்ததால் அவரை கொலை செய்ய கேரள முதல்வர் முடிவு செய்கிறார். அதன்படி, அவரை கொலை செய்ய, தமிழகத்திற்கு செல்லும் நால்வர் குழுவுடன் ஆர்யாவும் செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு மிக்க அந்த இடத்தில் நால்வர் குழு கொலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆர்யா, அந்த வீட்டுக்குள் புகுந்து, அந்த செல்வாக்கு மிக்க நபரை கொடூரமாக கொலை செய்கிறார். ஆர்யாவின் இந்த நடவடிக்கை நால்வர் குழுவை அதிர்ச்சியடைய செய்வதோடு, அவரைப் பற்றிய முழுமையான பின்னணியை அறிந்துக் கொள்ள வைக்கிறது. தமிழீழப் போராளியான ஆர்யா அந்த நபரை கொலை செய்தது ஏன் ?, இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆர்யா மற்றும் அந்த நால்வரின் வாழ்க்கை என்னவானது என்பதை, அதிரடியான ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே படத்தின் மீதிக்கதை.

ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் ஆர்யா, அழுத்தமான கதாபாத்திரத்தை தனது அளவான நடிப்பின் மூலம் சிறப்பாக கையாண்டிருக்கிறார். ‘மீகாமன்’ படத்தில் பார்த்த ஆர்யா போல் சில இடங்களில் தோன்றினாலும், தன் ஆழ்மனதில் இருக்கும் போராட்டக் குணத்திற்கு ஏற்ப மிக நிதானம் மற்றும் தெளிவை தன் நடிப்பில் நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார்.

குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கேரள மாநில காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா 90-காலக்கட்டத்தையும், சம்பவங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை அழுத்தமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ரோஹித் வி.எஸ்.வரியத்தின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது. ரஞ்சித் கோத்தேரியின் கலை பணி செயற்கையாக தெரிந்தாலும், காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, ஒரு குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதை கமர்ஷியல் ஆக்‌ஷன் பாணியிலான படமாக கொடுத்திருக்கிறார். அவரது திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் சித்தரிப்பு படத்தை சுவாரஸ்யமாகவும், தொய்வின்றியும் நகர்த்தி செல்கிறது.

ஜியென் கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் படம் விறுவிறுபாகவும், வேகமாகவும் பயணிக்கிறது. கேரள முதல்வர், ஆந்திராவை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி, தமிழ் போராளி, கேரள குடிசைப்பகுதியின் குற்றப் பின்னணி கொண்ட மக்கள், இவர்களை சுற்றி நடக்கும் கதையின் முடிவு ராஜஸ்தானில் நடப்பது, என்று ஒரு முழுமையான பான் இந்தியா படமாக இயக்கியிருக்கும் ஜியென் கிருஷ்ணகுமார், படத்தின் தனது சிறப்பான மேக்கிங் மூலம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.