’மை லார்ட்’ விமர்சனம்

159

நடிகர்கள் : சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
இயக்கம் : ராஜு முருகன்
தயாரிப்பு : ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் – ஜெயந்தி அம்பேத்குமார்

ராஜு முருகன் இயக்கத்தில், சசிகுமார், சைத்ரா ஜெ.ஆச்சார் நடிப்பில், ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா, அம்பேத்குமார் வழங்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் எப்படி இருக்கிறது ? விமர்சனத்தை பார்ப்போம்.

படத்தின் தலைப்பை பார்த்து இது ஒரு நீதிமன்ற படம் என்று நினைத்து விட வேண்டாம். சாமானியன் ஒருவன் அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒருவருக்கு நீதி சொல்லும் வாய்ப்பு கிடைத்தால், என்னவாகும் என்பதை விவரிக்கும் படம்.

எளியவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளோடு வாழும் சசிகுமாரும், அவரது மனைவியும் தங்களுக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்பதற்காக அரசு இயந்திரத்தை நாடுகிறார்கள். அது வழக்கம் போல் எளியவர்களை எட்டி உதைக்கிறது. பணம், அதிகாரம் ஆகியவைகள் முன்னாள் சாமானியார்கள் உயிருடன் இருந்தும் பிணமாக பார்க்கப்படும் அவல நிலையை மாற்றும் ஒரு வாய்ப்பு சசிகுமாருக்கு கிடைக்கிறது.

மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ஈடுபடும் அவர், வெளி உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, அறுவை சிகிச்சையை ரகசியமாக செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், அவரது இரத்தப் பிரிவு அரிதானது என்பதால், அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேட, இருவர் அதற்கு பொறுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமார்.

சசிகுமாரை தேர்வு செய்யும் அமைச்சர் தரப்பு, அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கிறது. அவர்களது வழியில் சென்று தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு இயந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் சாமானியனான சசிகுமார் எழுதும் தீர்ப்பு தான் ‘மை லார்ட்’.

அதிகார வர்க்கத்தினால் பாதிக்கப்படும் சாமானியர்களை தனது உடல் மொழிகளால் பிரதிபலித்திருக்கும் சசிகுமார் நடிக்காமல் சும்மா நின்றாலே அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, தந்தை ஆவியின் மூலம் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், அதிகார திமிரை தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி மிரட்டுகிறார். படுக்கையில் இருந்தாலும், தனது கதாபாத்திரத்தின் பலம் அறிந்து நடித்திருக்கும் அவரது நடிப்புத் திறன் வியக்க வைக்கிறது.

பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, மிதிபட்டாலும் எதற்கும் விலை போகாமல் நியாயம் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு தனது சிறப்பான நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், வட்டி தொழில் செய்யும் வசுமித்ரா என பரிட்சயமான முகங்களும், நடித்த பரிட்சயம் இல்லாத சில முகங்கள் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் தங்கி விடும் அளவுக்கு இயல்பாக பயணித்திருக்கிறார்கள்.

பிரமாண்டம், வண்ணமயமான காட்சிகளை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எளிய மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, இயக்குநர் ராஜு முருகனின் கதை சொல்லலுக்கு பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் தனக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கும் நீரவ் ஷாவின் பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் வலியை சொல்லும் விதமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன், இடைவேளை மற்றும் அதற்கு பிறகான படத்தை வழக்கமான சினிமா சுவாரஸ்யத்தோடு நகர்த்தி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், எளியவர்களின் வாழ்வின் மூலம் அதிகார வர்க்கத்தினருக்கும், அரசு இயந்திரத்தின் முரண்பாடுகளுக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார். தனது வசனத்தின் மூலம் சமூக அவலங்களை தோலுறித்திருப்பதோடு, அதை சரி செய்யும் அரசு இயந்திரத்தின் கோளாறுகளை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி சிரிக்க வைக்கிறார்.

சாதாரண மனிதர்களுக்கு நிகழப்போகும் முடிவு தான் சசிகுமாருக்கும் ஏற்பட போகிறது, என்பது போல் நகரும் கதையை, எதிர்பார்க்காத திருப்பத்தின் மூலம் வேறு ஒரு பாதையில் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் ராஜு முருகன், இந்த ‘மை லார்ட்’ மூலம் சாமானியர்களின் தீர்ப்பு அதிகார மமதை படைத்தவர்களை எப்படி அன்புக்கு அடிமையாக்குகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.