நடிகர்கள் : பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, அஷ்வின், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், கே.ஜெ.பாலமணிமர்பன், விக்னேஷ் கார்த்திக், பிரிகிடா, சஞ்சனா திவாரி, பவானி ஸ்ரீ, அமர், ராபின்
இசை : சதிஷ் ரகுநாதன்
ஒளிப்பதிவு : ஜெகதீஷ் ரவி, ஜோசப் பால்
இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்
தயாரிப்பு : கே.ஜெ.பி டாக்கீஸ் – கே.ஜெ.பாலமணிமர்பன், அணில் கே.ரெட்டி
திரை நட்சத்திரங்களின் வெறித்தனமான ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் மனதை புரிந்துக் கொள்ளாத இளசுகள், காதலின் தற்போதைய நிலையை எண்ணி கவலை கொள்ளும் ஆண்கள், ஆகிய மூன்று தரப்பினரையும் அலசும் வெவ்வேறு கதைகளில், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் சொந்த கதை மூலம் உலகளவில் பேசுபொருளாக உள்ள ஒரு விசயத்தை பற்றி அழுத்தமாக அல்லாமல் மேலோட்டமாக பேசியிருப்பது தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.
சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது பாணியாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே கைகொடுத்திருக்கிறது. அதே சமயம், முதல் பாகத்தைப் போல் பெரும் சர்ச்சையாக அல்லாமல், ஒரு எல்லைக்குள் வலம் வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், பேசும் ஒவ்வொரு பிரச்சனையிலும், இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை பேசி, நடுநிலையாக நின்றிருக்கிறார்.
கதைகளின் மாந்தர்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
கதைகளை சொல்லும் கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பில்டப் கொஞ்சம் ஓவர் தான்.
தற்போதைய காதலின் நிலையையும், பெண்களின் மனங்களையும் நினைத்து கவலை கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அவரது நண்பராக நடித்திருக்கும் அமரனின் டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கிறது.
அழுத்தமான கதாபாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல், தனது அதிரடியான செயல் மூலம் 2கே கிட்ஸுகளுக்கு அதிரடியான அறிவுரை வழங்கி தம்பி ராமையா அதிர்ச்சியளித்திருக்கிறார்.
நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் இசையில் ஹாட் ஸ்பாட்டின் முதல் பாகத்திற்கான பீஜியம் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
யு.முத்தயனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விசயங்களை சுவைபட சொல்வதோடு, அதில் இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும் நியாயத்தை சமமாக பேசி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் சிந்தனை சமூக பிரச்சனைகளை விவாதிப்பது மட்டும் இன்றி, அதில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து பார்வையாளர்களிடம் பல கேள்விகளை முன் வைத்து, சூடான விவாதங்களும், கேள்விகளும் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்து மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.