’இந்தியன் பீனல் லாவ்’ (IPL) விமர்சனம்

200

நடிகர்கள் : கிஷோர், டி.டி.எஃப்.வாசன், அபிராமி, ஹரிஷ் பெராடி, திலீபன், சிங்கம்புலி, நரேன்
இசை : அஸ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு : எஸ்.பிச்சுமணி
இயக்கம் : கருணாநிதி
தயாரிப்பு : ராதா ஃபிலிம் இண்டர்நேஷ்னல் – ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன்

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள், ஒருவருக்கு எதிராக இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அவரை குற்றவாளியாகக் கருதி தண்டனை வழங்க முடியும். அந்த வகையில் எந்தவித குற்றமும் செய்யாத கிஷோர், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவ்ருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும் ஆதரங்கள் சமர்க்கப்பிட்டு குற்றவாளியாக்கப்படுகிறார்.

குற்றம் செய்யாத கிஷோரை குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க, அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப்.வாசன் முயற்சிக்கிறார். இறுதியில், யாருடைய முயற்சி வெற்றி பெற்றது, கிஷோரை குற்றவாளியக்க முயற்சிப்பவர்கள் யார், எதற்காக, என்பது தான் படத்தின் கதை.

கிஷோர் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் அவர் எதிர்கொள்ளும் கொடுமைகள் பார்வையாளர்களை கலங்க வைக்கிறது.

அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது தனித்துவத்தை படத்திலும் வெளிக்காட்டி இருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன் நடிப்பு அளவு. காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் தனது அதிகப்படியான நடிப்பில் தலைவலியை ஏற்படுத்துகிறார்.

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கு அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறை சொல்ல முடியாத வகையில் பயணித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சமணி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கடினமாக உழைத்திருந்தாலும், பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

படத்தொகுப்பாளர் பிரகாஷ் மாப்புவின் பணியும் சிறப்பு

எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

சில நேரங்களில் அப்பாவி மக்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சிறை படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும் தைரியமாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

ரேட்டிங் 3.2/5

Comments are closed.