நடிகர்கள் : பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பூவையார்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ரவி யாதவ்
இயக்கம் : தியாகராஜன்
தயாரிப்பு : ஸ்டார் மூவிஸ் – சாந்தி தியாகராஜன் & ப்ரீத்தி தியாகராஜன்
பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்காக, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் பிரஷாந்தின் ‘அந்தகன்’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
பார்வையற்றவரான பிரஷாந்த் பியானோ இசைக்கலைஞர். லண்டனில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக பியானோ வகுப்பு எடுத்து பணம் சேர்ப்பவருக்கு, மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது. அதன் மூலம் நடிகர் காத்திக்கின் நட்பு கிடைக்க, அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சிறு இசை நிகழ்ச்சி நடத்த செல்கிறார். ஆனால், அங்கு சென்றதும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பிரஷாந்த் கண் முன் நடக்கிறது. அது என்ன?, பார்வையற்றவராக இருக்கும் பிரஷாந்த் கண் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல் ஏற்படுகிறது?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதை காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு சொல்வது தான் ‘அந்தகன்’.
சிறு இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்தை நாயகனாக பார்த்தாலும், அதே இளமையோடும், புத்துணர்ச்சியோடும் திரையில் தோன்றுகிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருப்பவர் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கிறார். எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடையும் பிரஷாந்த், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து இடங்களிலும் பிரஷாந்தின் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக மொத்த திரைக்கதைக்கும் சுவாரஸ்யம் சேர்ப்பதில் பிரஷாந்தின் நடிப்பு முக்கிய பங்கு வகிப்பதோடு, இனி கோலிவுட்டின் டாப் இடத்திற்கு அவர் செல்வதை உறுதி செய்திருக்கிறது.
பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நவசர நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில இடங்களில் அவரது முகத்தில் வயது முதிர்வு தெரிவது சிமி கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை குறைத்தாலும், அவரது அதிரடியான நடிப்பு அந்த குறையை மறைத்துவிடுகிறது.
தேவதை போல் பிரஷாந்த் வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுக்கும் பிரியா ஆனந்த், அழகாக இருக்கிறார். பிரஷாந்துடன் அன்பாக உறவாடுகிறார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அழகாக நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழலுக்கு ஏற்ப முகத்தை மாற்றி ரியாக்ஷன் கொடுக்கும் காட்சிகள் அசத்தல். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி மூலம் திரையில் சரவெடியாக வெடித்திருக்கிறார்.
நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி அனுபவத்தை கொடுக்கிறது. பின்னணி இசையில் சுழலுக்கு ஏற்ப வித்தியாசத்தை காட்டியிருப்பவர், படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பியானோ உள்ளிட்ட மென்மையான இசைக்கருவிகள் மூலம் பின்னணி இசையை ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் கேமரா காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி கண்கலங்கு விருந்து படைத்திருக்கிறது.
பார்வையற்றவராக பிரஷாந்த் தோன்றிய சில நிமிடங்களில் இடம்பெறும் ஒரு திருப்பம், ஏன் இப்படி? என்ற கேள்வியுடன் அவருடன் பயணிக்க வைக்கிறது. அதை தொடர்ந்து கார்த்திக் வீட்டுக்கு பிரஷாந்த் செல்லும் போது நடக்கும் சம்பவம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அதில் இருந்து என்ன நடக்கும்?, என்ன நடக்கும்? என்று அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பார்ப்போடு நகர்வதோடு, திரைக்கதையில் வரும் புது புது திருப்பங்கள், திரையில் இருந்து நம் கண்கள் அகலாதபடி பார்த்துக்கொள்கிறது.
படத்தில் இடம்பெறும் சிறு சிறு வேடங்களில் கூட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சில காட்சிகளில் வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும், மனோபாலா, யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி – வனிதா விஜயகுமார் ஆகியோர் மூலம் அவ்வபோது சிரிக்கவும் வைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றாலும் அதை பிரமாண்டமான ஒரு படைப்பாகவும், அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5
Comments are closed.