’கெழப்பய’ விமர்சனம்

209

நடிகர்கள் : கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ்
இசை : கெபி
ஒளிப்பதிவு : அஜித்குமார்
இயக்கம் : யாழ் குணசேகரன்
தயாரிப்பு : சீசன் சினிமா – யாழ் குணசேகரன்

வயதான முதியவர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் ஒத்தையடி பாதையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாடி ஒரு கார் வருகிறது. அந்த காரில், கர்ப்பிணி பெண் மற்றும் ஐந்து ஆண்கள் பயணிக்கிறார்கள். ஆனால், அந்த காருக்கு வழிவிடாமல் முதியவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்க, காரில் வருபவர்கள் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து வழி விட மறுக்கும் முதியவரை அடிக்கிறார்கள். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படுவதோடு, ஊர் மக்களும், போலீஸ்காரர்களும் வந்து விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது?, அந்த காருக்கு பெரியவர் வழி விட மறுப்பது ஏன்? என்பதை சொல்வது தான் ‘கெழப்பழ’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதிரேசகுமார், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காருக்கு வழிவிடாமல் தனது முடிவில் உறுதியாக இருக்கும் அவர், அடி வாங்கிய பிறகும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் போதே, காரின் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய விசயம் இருப்பதை நமக்கு உணர்த்தி விடுகிறார்.

கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

எளிமையான கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும்படி காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் கெபியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் இசையை தவிர்த்துவிட்டு அமைதியை கடைப்பிடித்திருப்பது காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சிறு சம்பவத்தை வைத்து மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் யாழ் குணசேகரன், முதல் பாதியை படு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். பெரியவர் விடாப்பிடியாக இருக்கும் போதே காரில் என்ன இருக்கிறது?, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

திரைக்கதை மற்றும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குநர் யாழ் குணசேகரன், காரில் இருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கும் போது கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருப்பதோடு, அதற்கான காட்சிகளை அழுத்தமாக வைத்திருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில், சிறிய நிகழ்வு ஒன்றை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் யாழ் குணசேகரனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.