’பொன் மாணிக்கவேல்’ விமர்சனம்

283

pon-manickavel-review-bf
நடிகர்கள் : பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன், சுதன்சு பாண்டே மற்றும் பலர்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ்
இயக்கம் : ஏ.சி.முகில் செல்லப்பன்
தயாரிப்பு : நேமிச்சந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக்

அறிமுக இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில், பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சென்னையில் நீதிபதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரியான பிரபுதேவாவிடம் உதவி கேற்கும் காவல்துறை உயர் அதிகாரி, அவரிடமே வழக்கை ஒப்படைக்க முடிவு செய்கிறார். ஆனால், பிரபுதேவா வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊரில் விவசாயம் செய்துக்கொண்டிருக்கும் தகவல் உயர் அதிகாரிக்கு கிடைக்கிறது. இருந்தாலும், எப்படியாவது பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர்த்து வழக்கை ஒப்படைக்க வேண்டும், என்று உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மீண்டும் பணியில் சேர்ந்து நீதிபதி கொலை வழக்கை கையில் எடுக்கும் பிரபுதேவா, அதன் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார், அவர் பணியை ராஜினாமா செய்தது ஏன், என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக காக்கி சீருடை அணிந்திருக்கும் பிரபுதேவா, நடிப்பில் கம்பீரத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது பாணியில் அவ்வபோது கலாய்க்கும் விதமாகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகரடி காட்டுபவர், கிடைக்கும் சில வாய்ப்புகளில் தனது நடனத்தையும் வெளிக்காட்டி ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார்.

பிரபுதேவாவின் மனைவியாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், சில காட்சிகளில் ரொமான்ஸ் செய்வதோடு சரி, மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வில்லன்களாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன் மற்றும் சுதன்சு பாண்டே ஆகியோர் கார்ப்பரேட் முதலாளிகள் வேடத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, கொடுத்த வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகமே.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும், என்பது பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன், அதை மசாலாத்தனம் மிக்க கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் செய்த போலீஸ் வேலையை அப்படியே காப்பியடித்தது போல், பிரபுதேவாவும் செய்திருப்பது சற்று சலிப்படைய செய்தாலும், நீதிபதியை கொலை செய்தவர்கள் யார்? என்ற எதிர்ப்பார்ப்பும், அதில் இருக்கும் திருப்பு முனையும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

மொத்தத்தில், ‘பொன் மாணிக்கவேல்’ கமர்ஷியலாக சொல்லப்பட்ட நல்ல மெசஜ்

Comments are closed.