’பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு

308

pns01
விஜய் சேதுபதி நடிப்பில், நலன் குமராசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ப்ளக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. புதுமுகங்களின் உருவாக்கத்தில் அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இப்படத்தை Head Media works நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா அரன் பேசுகையில், “இப்படம் டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக செய்துள்ளோம். மூடர் கூடம், சூது கவ்வும் படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும் மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். ” என்றார்.

தயாரிப்பாளர் ஒளிப்பதுவாளர் விக்னேஷ் செல்வராஜ் பேசுகையில், “நானும், பாலாவும் கல்லூரி தோழர்கள், படிக்கும் போது நானும் அவனும் இணைந்து இந்த படத்தை, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பின் பல போராட்டங்களுக்கு பிறகு நாமே செய்யலாம் என இறங்கி செய்தோம். இந்தப்படம் நாங்கள் இந்த மேடைக்கு வரும் என நினைக்கவில்லை, ஆனால் இப்போது இது பெரிய அளவில் ரிலீஸாவது மகிழ்ச்சி. இப்படத்தை இந்த அளவு பெரிய அளவில் வெளியிட காரணமாக இருந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசுகையில், “தம்பி நிஷாந்த் மூலம் தான் இந்தப்படத்தை பார்த்தேன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்று சொன்னார்கள். பின் நான் இப்படத்தை CV குமாரிடம் அறிமுகப்படுத்தினேன். இப்போது இப்படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படம் எடுத்தால் எப்படியாவது அதற்குரிய இடத்தை அப்படம் பெற்றுவிடும், என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படம் சூது கவ்வும் படத்தை போல் அனைவரையும் கவரும்.” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், “2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும். அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி.” என்றார்.

தயாரிப்பாளர் CVகுமார் பேசுகையில், “அட்டகத்தி எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது. அதுமாதிரி தான் இந்தப்படமும், இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம் தான் இந்தப்படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து அவருக்கு பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது, இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

pns02
தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா பேசுகையில், “8 வருஷம் முன்னால் நடந்த அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படம் முதலில் பார்க்கபோகும் போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள். பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான புதிய அனுபவமாக இருக்கும்.” என்றார்.

ABI & ABI Pictures சார்பில் நந்தினி அபினேஷ் பேசுகையில், “இந்தப்படத்தை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளிடுவது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம், ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக ’பன்றிக்கு நன்றி சொல்லி’ படம் இருக்கும். இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும்.” என்றார்.

பாலா அரன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசையமைக்க, ராம் சதீஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் கலை இயக்குநராக பணியாற்ற சிவகுமார் ஒலிக்கலவை பணியை கவனித்துள்ளார். பாபு எரிக் நடனக் காட்சிகளை அமைக்க, எஸ்.எப்.எக்ஸ் பணியை சேதுவும், மக்கள் தொடர்பாளர் பணியை நிகிலும் கவனித்துள்ளனர்.

Comments are closed.