கதை : ‘வெண்ணிலா கபடி குழு’வையும் ஜாக்கிசான் நடித்த ‘கராத்தே கிட்’டையும் இணைத்து அதற்கு கிரிக்கெட் முலாம் பூசினால் அதுதான் ‘1983’
‘நேரம்’ பட புகழ் நிவின் பாலி தான் கதையின் நாயகன்.. சிறுவயதிலிருந்தே, குறிப்பாக 1983ல் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இருந்தே நிவினுக்கு கிரிக்கெட் தான் உயிர் மூச்சு.. லேத் வைத்து நடத்தும் அவரது தந்தைக்கோ மகனை இஞ்சினியராக்கி பார்க்கவேண்டும் என்பது விருப்பம்.
ஆனால் பையன்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையுடன் சுற்றும் நிவின் படிப்பை மட்டுமல்ல, தன்னையே சுற்றிவரும் காதலியையும் கோட்டை விடுகிறார். லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு கிராமங்களில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு அந்த அளவிலேயே திருப்திப்பட்டு நின்றுவிடுகிறார் நிவின்.
காலச்சக்கரம் சுழன்று அவருக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைக்கிறது. அவருக்கு வாய்த்த மனைவியோ முதலிரவு அன்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் சச்சின் படத்தை பார்த்து அவர் யாரென்று கேட்டு… நிவினுக்கு வைக்கிறார் பாருங்கள் ஒரு (இடைவேளை) ஆப்பு..
இடைவேளைக்குப் பிறகு நீங்கள் நினைப்பதுபோல நிவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் எல்லாம் ஆகிவிடவில்லை.. தந்தைக்கு உதவியாக லேத்தை கவனித்துக்கொள்கிறார். மோட்டார்களுக்கு காயில் கட்டுகிறார். அவருடைய நண்பர்களும் கிரிக்கெட்டை மறந்து அங்கங்கே ஏதோ ஒரு தொழிலில் ஒன்றி விடுகின்றனர்.
காலம் சுழல்கிறது.. ஒருநாள் ஏதேச்சையாக தனது ஏழு வயது மகன் கண்ணன் தென்னை மட்டையால் பந்தை அடித்து விளையாடுவதையும் அவன் கைகள் பேட் சுழற்றும் லாவகத்தையும் பார்க்கிறார் நிவின்.. அவ்வளவுதான் இழந்த ஒன்றை திரும்ப பெற்றுவிட்டோம்.. அல்லது பெறப்போகிறோம் என அவரது கண்களில் மின்னல் அடிக்கிறது.
ஆரம்பத்தில் பையனுக்கு வீட்டிலேயே பந்து போட்டு பிராக்டீஸ் கொடுக்கிறார் நிவின்.. ஆனால் பையனுக்கு பத்து வயதாக, அதன்பிறகு அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்வது என தெரியாமல் தடுமாறி நிற்கும் நிவினுக்கு ஆபத்பாந்தவனாக வருகிறார் கிரிக்கெட் கோச் அனூப் மேனன்..
சிறுவனிடம் உள்ள பேட்டிங் திறமையை கண்டுகொண்டு அவனை தன்னிடம் பயிற்சிபெற சேர்த்துக்கொள்கிறார் அனூப் மேனன்.. மிகுந்த சிரமத்திற்கு இடையே 50 கி.மீ தூரத்தில் இருந்து, வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு பயிற்சிக்கு தன் மகனை அழைத்து வருகிறார் நிவின்..
முதலில் அப்பா-மகனின் இந்த உணர்வுகளை புரிந்துகொள்ளாத நிவினின் மனைவி ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு கட்டத்தில் தனது வளையலை கழட்டி நிவினிடம் கொடுத்து மகனின் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கிக்கொள்ளச் சொல்லும் அளவுக்கு மாறிவிடுகிறார்.
ஆனால் சோதனையாக அனூப் மேனனுக்கு சென்னைக்கு வரச்சொல்லி அழைப்பு வருகிறது. ஆனால் சிறுவனின் பிராக்டீஸ் தடைபடக்கூடாது என நினைக்கும் அவர் சிறுவனை தனது நண்பரான இன்னொரு கோச்சிடம் அனுப்புகிறார். ஆனால் அந்த புதிய கோச் வைக்கும் டெஸ்ட்டில் ஆரம்பத்திலேயே சொதப்பி விடுகிறான் சிறுவன்.
அதனால் நிவினையும் அவரது மகனையும் உதாசீனப்படுத்தி அனுப்பி விடுகிறார் அந்த கோச்.. இந்நிலையில் மாவட்ட அளவில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. இதில் நுழைந்துவிட்டால், ஜெயித்துவிட்டால் அடுத்து, சிறுவனின் எதிர்காலம் பிரகாசமாகும் என்கிற சூழ்நிலை..
ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் சோதனைகளையே சந்திக்கும் நிவின், இறுதியாக தான் இழந்ததை, தனக்கு கிடைக்காததை தன் தந்தை தனக்கு தராததை, தனது மகன் விரும்பியதை நிறைவேற்றினாரா என்பதுதான் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ்.
ரொம்பவும் ரிலாக்ஸாக இப்படி ஒரு படத்தை பார்த்து எவ்வளவு நாளாயிற்று.. படத்தை தாங்கி நிற்கும் முக்கியத்தூண் நிவின் பாலி தான்.. ஒரு வளரும் இளம் ஹீரோ தனது கேரியரில் எந்தவிதமாக படங்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்கு நிவின் ஒரு சரியான முன்னுதாரணம்.
சின்ன வயதில் கிரிக்கெட்டிற்காக படிப்பை தொலைப்பது, கிரிக்கே ஆர்வத்தால் தன்னை விரும்பும் காதலியைக்கூட திருமணம் செய்ய முடியாமல் போவது, தன் ஆசைப்படி கிரிக்கெட்வீரனாகவும் ஆகமுடியாமல், அப்பாவின் ஆசைப்படி இன்ஜினியராகவும் ஆக முடியாமல் கிராமத்தில் மோட்டார் மெக்கனிக்காக காலம் தள்ளுவது என தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதை தனது நடிப்பிலும் கொஞ்ச கொஞ்சமாக மெருகேற்றி காட்டியிருக்கிறார் நிவின்.
தன் மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது என்பதை பார்த்ததும் அவருக்கு ஏற்படு சந்தோஷ உணர்வுகளை அவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்திருக்கிறார்.. மொத்தத்தில் இயலாமை, ஆதங்கம், வருத்தம், உற்சாகம் என கலந்து கட்டியிருக்கிறார் நிவின். நிச்சயம் இந்தப்படம் அவருக்கு ஒரு மைல் கல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தப்படத்தில் காதாநயகிக்கு என்று தனியாக வேலை எதுவும் இல்லை.. ஆனால் அழகு சித்திரமாக நிவினின் பள்ளித்தோழி மஞ்சுளாவாக வரும் நிக்கி கல்ராணி, சாதாரண அழகுடன் நிவினுக்கு மனைவியாக வந்தாலும் காலபோக்கில் யதார்த்தமான ஒரு குடும்பத்தலைவிக்கே உரிய பாந்தமான அழகிற்கு மாறும் சுசீலாவாக ஸ்ரீந்தா ஆஷப் ஆகிய இருவருமே நம் கவனம் ஈர்க்கிறார்கள்.
தன்னம்பிக்கை தருகின்ற கேரக்டர் என்றால் கூப்பிடுங்கள் அனூப் மேனனை என்று சொல்லும் அளவுக்கு கிரிக்கெட் கோச்சாக வரும் அனூப் மேனன் அசத்துகிறார். சிறுவன் கண்ணனை ஊக்குவிப்பதும் சிறுவனின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஒவ்வொரு கல்லையும் அவர் தகர்ப்பதும் விளையாட்டு ஆர்வம் உள்ள சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அவர் தரும் உற்சாக டானிக்.
நிவின் பாலியின் மகனாக நடித்திருக்கும் கண்ணன் என்கிற சிறுவன் தான் எத்தனை விதமான எக்ஸ்பிரஷன்கள் காட்டுகிறான்.. அதிலும் அவன் கிரிக்கெட் மட்டையை லாவகமாக சுழற்றி ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு தூக்கும்போது தியேட்டரில் கைதட்டல் அடங்க வெகு நேரமாகிறது,.
நிவின் பாலியின் தந்தையாக வரும் ஜாய் மேத்யூ மட்டும் லேசுப்பட்டவரா என்ன..? தனது மகன் கிரிக்கெட் என்கிற பெயரால் நன்றாக படிக்காமல் தன் கனவை தகர்த்துவிட்டான் எனும்போது ஆதங்கத்தையும், அதன்பிறகு தனது பேரனையும் தன் மகன் படிக்கவிடாமல் தன்னைப்போல ஆக்கவிரும்புகிறான் என்கிறபோது ஏற்படும் எரிச்சலையும் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேசமயம் நிவின் தனது மகனுக்காக, ஒரு தானியங்கி பந்துபோடும் எந்திரத்தை ராப்பகலாக உழைத்து தயார் செய்து, ஆனால் அது வேலை செய்யாமல் இருப்பதை பார்த்து கலங்கி நிற்கும் இடத்தில், பழையதை எல்லாம் மறந்து ஒரு அனுபவமுள்ள ஆசானாக அந்த இயந்திரத்தின் குறைபாட்டை நீக்கி சரிசெய்து கொடுக்கும் இடத்தில் தனது மகன் நிவினை மட்டுமல்ல.. நம்மையும் நெகிழவைக்கிறார் ஜாய் மேத்யூ.(இவர்தான் கடந்த வருடத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘ஷட்டர்’ படத்தை இயக்கியவர்).
‘ஏபிசிடி’ படத்தில் துல்கர் சல்மானோடு சேர்ந்து காமெடியில் அதகளம் பண்ணிய ஜேக்கப் கிரிகேரி இதில் கொஞ்ச நேரமே வந்தாலும் சச்சின் என பெயர் வைத்துக்கொண்டு தனது சேஷ்டைகளால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.. நிவின் பாலியின் நண்பர்களாக வரும் அனைவருமே கிரிக்கெட் கனவுகளில் வாழும் பலரையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள்.
இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைனுக்கு இது முதல் படம்.. ஆனாலும் முதல் படத்திலேயே சிக்ஸர் விளாசியிருக்கிறார். முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்ற விதத்திலும் இரண்டாம் பாதியை ஜெட் வேகத்தில் பறக்கவிட்டு க்ளைமாக்ஸில் படம் பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவந்த விதத்திலும் தான் ஒரு வித்தைக்காரன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சமீபத்தில் தான் இந்தப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பையனின் பெற்றோர்களும், தங்கள் மகனின் எதிர்காலம் அவனது விருப்பம்போல அமையவேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும், ஏன் அவர்கள எதிர்காலம் தங்களது விருப்பம் போலதான் அமையவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் கூட, ஒருமுறை குடும்பத்துடன் சென்று இந்தப்படத்தை பார்த்துவிட்டு வாருங்கள்..
