நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்டு மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் கொள்ளையர்களை தேடி சென்றது, அங்கே நடத்திய தேடுதல் வேட்டை, கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி உடன் சென்றிருந்த காவலர்கள் விவரித்து சொல்லும்போது, சமீபத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் நம் மனதில் தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போலீஸாரின் போராட்ட வாழ்க்கையைத்தான் அந்த படத்தில் காட்டியிருந்தார்கள்.
படம் பார்த்த நமக்கே அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், அப்படி ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் இரண்டு வருடம் வாழ்ந்த நடிகர் கார்த்தியின் மனதில் பெரியபாண்டியனின் மரணத்தால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
அதனால் தான் தென்காசியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள சாலைப்புதூருக்கு சென்று பெரியபாண்டியன் அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து பெரிய பாண்டியனின் குடும்பத்துக்கு ஆறுதலும் கூறினார்.
அதன்பின் கார்த்தி கூறியதாவது “பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் பெரியபாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது.
அதன்பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல்துறை அதிகாரிகளை அழைத்து செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்து விட கூடாது என்று பயந்து கொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது“ என்றார்
உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும்போதே இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று எனக்கு மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது. பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார்.
அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்ல எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிற்கும்போது நெஞ்சம் பதை பதைத்து விட்டது. அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன்” என்றார் நடிகர் கார்த்தி.

Comments are closed.