’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) விமர்சனம்

76

நடிகர்கள் :சபரி, ரோகிந்த், ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், எம்.எஸ்.மூர்த்தி
இசை : எம்.எஸ். மூர்த்தி
ஒளிப்பதிவு : சேவிலோ ராஜா
இயக்கம் : எம்.எஸ்.மூர்த்தி
தயாரிப்பு : எம்.எஸ்.மூர்த்தி

நாயகி ரச்சிதா மகாலட்சுமி – சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரச்சிதாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். அதே சமயம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிப்பதும், ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்தும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போட, அதில் இருந்து ரச்சிதா தொடர்ந்து தப்பித்து வருகிறார். இதற்கிடையே, திடீரென்று இரவு நேரத்தில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை உணரும் ரச்சிதா, அவரை குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சிக்கும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்த விட்டார் என்பதும், 99 எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது. அப்படியானால் ரச்சிதாவின் கண்களுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்?, இறந்த அவர் எதற்காக ரச்சிதாவை சந்திக்கிறார் ?, இரவு நேரங்களில் பயணிக்கும் குடியிருப்பின் சங்க தலைவர் மூர்த்தி யார் ? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கொஞ்சம் திகில், நிறைய திருப்பங்கள் சேர்த்து சொல்லியிருக்கும் பதில்கள் தான் ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு).

திகில் படங்கள் என்றாலே வழக்கமாக சொல்லப்படும் பாணியில் இந்த படத்தின் கதை கையாளப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், பல்வேறு திருப்பங்களோடும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சில கதாபாத்திரங்கள் மூலமாகவும் சொல்லியிருப்பது படத்ஹ்டை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, ஆவி புகுந்த பிறகு வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான நடிப்பு, கணவரிடம் காதலை வெளிப்படுத்தும் நடிப்பு என, தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இருந்தாலும், அவரிடத்தில் பார்வையாளர்கள் எதிர்பார்த்தவை படத்தில் இல்லாதது ஏமாற்றமே.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, புத்த மதத்தின் ஈர்ப்பால், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதோடு, தனக்கு தீங்கு இழத்தவருக்கும் எதுவும் நடக்க கூடாது, என்று நினைக்கும் நல்ல மனதுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.

நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் என்றாலும், தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நல்லவர்களாக நடித்து மனைவியை ஏமாற்றும் அவர்களது வில்லத்தனத்தை மிக சரியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்கள்.

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது காமெடி கலாட்டாக்கள் பெரிதாக எடுபடவில்லை. பவன் கிருஷ்ணா, சிறப்பு தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரது கதாபாத்திரங்களும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முழு படத்தையும் படமாக்கியிருந்தாலும், பல்வேறு கோணங்கள் மூலம் ஒவ்வொரு முறையும் புதிய வடிவில் அடுக்குமாடி குடியிருப்பை காண்பித்து, ஒரே இடம் என்ற உணர்வை பார்வையாளர்கள் மனதில் இருந்து நீக்கி விடுகிறார்.

மீனாட்சி சுந்தரத்தின் படத்தொகுப்பு மற்றும் ஜெயமுருகனின் கலை இயக்குமும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் எம்.எஸ்.மூர்த்தி, ஒரு வீடு, அதில் புதிதாக குடியேறுபவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், என்று திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமாண பாணியோடு கதை சொல்லியிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் மூலம் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். அச்சுறுத்தும் திகில் காட்சிகளை தவிர்த்துவிட்டு, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், மனிதன் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் சாதி என்ற தேவையில்லாத ஒன்றை சுமந்துக் கொண்டிருப்பதை கைவிட வேண்டும் என்று, சில கருத்துகளை போகிற போக்கில் சொல்லியிருக்கும் எம்.எஸ்.மூர்த்தி, இயக்குநராக ஒரு திகில் கதையை நேர்த்தியாக கையாண்டிருப்பதோடு, அதன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வித்தையையும் மிக சரியாக செய்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.