அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘8 தோட்டாக்கள்’.. காரணம் என்ன..?

216

சிறுபிள்ளை வெள்ளாமை வீடுவந்து சேராது என முன்பு சொல்லப்படுவது உண்டு.. ஆனால் இன்று சினிமாவை பொறுத்தவரை சிறு பிள்ளைகள் சிறப்பான அறுவடையை ஈட்டி தருகிறார்கள்.. அதற்கு சமீபத்திய உதாரணம் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு’ என்றால், அடுத்த இடத்தில் அதேவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது வரும் ஏப்-7ஆம் தேதி வெளிவர இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படம்..

இந்தப்படத்தின் இயக்குனர் பார்ப்பதற்கு கல்லூரி மாணவனைப்போல இருந்தாலும் இவர் மிஷ்கினின் சீடர் என்பதில் இருந்தே தனது முதல் படத்துக்கான வெற்றிக்காக எந்த அளவுக்கு தீவிரமாக வேலைபார்த்திருப்பார் என்பதும் சொல்லாமலே புரிகிறது.. படத்தின் ட்ரைலரும் கூட அதை உறுதிப்படுத்துகிறது..இருந்தாலும் இந்தப்படத்தில் கையாண்டிருக்கும் விஷயம் க்ரைம் த்ரில்லர் என்பதுதான் நம்மை ஷாக்காக வைக்கிறது..

நகரின் பரபரப்பான இடத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி மாயமாகிறது. அதில் உள்ள 8 தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில் வெடிக்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? அதனால் என்னனென்ன பயங்கர விளைவுகள் நிகழ்கின்றன.? இதற்கு காரணம் யார்? என்பதுதான் படத்தின் கதை.

இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மகன் வெற்றி தான் கதாநாயகன் என்றாலும் அவரை ஒரு கதையின் கதாபாத்திரமாகத்தான் ட்ரீட் பண்ணியிருக்கிறாராம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.. தேவையில்லாத பில்டப் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என எந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் இல்லாமல் இயல்பான போலீஸ் கேரக்டரில் அவரும் சரியாகவே பொருந்தியிருக்கிறார் என்றே ட்ரெய்லர் காட்டுகிறது.

கதாநாயகியாக நடித்துள்ள அபர்ணா கோபிநாத், மலையாளத்தில் தான் அறிமுகமான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்திலேயே தனது நடிப்பால் மலையாள ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர்.. நிச்சயம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்வார் என நம்புவோம்..

நாசர், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் இயக்குனரின் நேரத்தியான வேலையை பாராட்டி தள்ளுகிறார்கள்… குறிப்பாக இந்தப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள்.. மேலும் மைம் கோபி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்..

ஏப்-7ல் வெளியாக இருக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படமும் தமிழ் சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

Comments are closed.