
வறுமைக்காகவும் வசதிக்காவும் எந்த சூழ்நிலையிலும் விளைநிலங்களை யாரும் விற்ககூடாது.. ஒரு விவசாயி, கடைசிவரை விவசாயியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற கருத்தை மனதில் பதிய வைத்துள்ள படம் தான் இந்த 49 ஓ.
கிராமத்தில் விவசாயிகளின் வறுமை, குடும்ப சூழ்நிலைகளை பயன்படுத்தி, அவர்களது விலை நிலங்களை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கி பிளாட் போட்டு விற்கிறார் திருமுருகன். சக விவசாயி ஒருவர் இப்படி பணத்தை விற்று அந்தப்பணமும் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள, அதை கண்டு பொங்கி எழுகிறார் இன்னொரு விவசாயியான கவுண்டமணி..
அந்த நேரம் பார்த்து இடைத்தேர்தல் வர எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க தேர்தலில் நிற்கிறார் கவுண்டமணி. தேர்தலில் ஜெயித்து எதிராளிகளின் கொட்டத்தை கவுண்டமணி அடக்கினாரா..? விளைநிலங்களை உரியவர்களிடம் சேர்த்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் சூழ்நிலையில் விவசாயத்தின் மகிமையை கவுண்டமணியை வைத்து சொல்லியிருப்பது நல்ல முயற்சி.. காமெடி காட்சி என தனி ஏரியாவில் இறங்காமல், இன்றைய நடைமுறைகளை நையாண்டி செய்யும் போதெல்லாம் சிரிக்க வைக்கிறார் கவுண்டமணி.. அதனால் வழக்கமான கவுண்டமணியை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும்..
ஆனாலும் கவுண்டர், கவுண்டர் தானே.. வயதானாலும் கூட நடிப்பிலும் மிடுக்கிலும் அந்த கம்பீரம் குறையவில்லை. நிலங்களை விற்பதற்காக விளம்பரப்படமெடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன், சாம்ஸ் ஆகியோர் வரும் காட்சிகளில் கவுண்டரும் சேர்ந்துகொள்ள ஒரே வெடிச்சிரிப்பு தான். திருமுருகனும் கவுண்டமணிக்கு ஈடுகொடுத்து விளத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். திரைக்கதை முழுவதையும் கவுண்டமணி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் காதல், சண்டை போன்ற காட்சிகள்எதுவும் இல்லை.
வசனங்களில் இன்றைய நாட்டுநடப்புகளை விமர்சனம் செய்து பாராட்டுப் பெறும் இயக்குநர் ஆரோக்கியதாஸ், திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் படம் மெதுவாகவே நகர்கிறது. புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் எதுவும் இல்லாமல் விழிப்புணர்வு நோக்கத்தில் ஒரு படம் தந்ததற்காக இயக்குனர் ஆரோக்கியதாசை பாராட்டியே ஆகவேண்டும்.
Comments are closed.