36 வயதினிலே – ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்..!

103

மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக், அதே சூப்பர்ஹிட் இயக்குனரான ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் படத்தை இயக்குவது, தனது கணவர் சூர்யாவே தான் நடிக்கும் படத்தை தயாரிப்பது என எட்டு வருடம் கழித்து 36 வயதினிலே’ மூலமாக மீண்டும் திரையுலகில் வலுவான அடி எடுத்து வைக்கிறார் ஜோதிகா..

நேற்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஜோதிகாவை வரவேற்பதற்காகவே எழுதப்பட்ட பாடல் போல, இந்தப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ‘வாடி ராசாத்தி’ என்கிற பாடல் விழா அரங்கின் பின்னணியில் ஒலிக்க ஆரம்பித்தபோதே விழா களைகட்ட தொடங்கிவிட்டது. விழாவை தொகுத்து வழங்க சின்னத்திரை ராசாத்தி டிடியும் வந்துவிட அமர்க்களமாக ஆரம்பித்த விழா இறுதிவரை அட்டகாசமாகவே நடந்தது..

தயாரிப்பாளராக முதலில் மைக் பிடித்தார் சூர்யா.. “இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தோட டிவிடியை கொடுத்து பாக்கச்சொன்னதும், எனக்குள்ள ஒரு குரல் இதுதான் உன்னோட முதல் படி இந்த ரூட்லயே போன்னு சொல்லுச்சு. இந்த 2டி நிறுவனம் ஜோவுக்காகவே உருவாக்கப்பட்டது. இத்தனை நாளா அவரை பூட்டி வச்சுட்டமேன்னு கொஞ்சம் கில்டியா இருக்கு” என உருகினார் சூர்யா..

“தமிழ்ல பெண்களுக்கான படங்கள் குறைவா இருக்கு. இந்தப்படத்தோட ஸ்கிரிப்ட் எங்கிட்ட வந்தப்ப, என்னோட ப்ரண்ட்ஸ் ஜோ உனக்கு ஒரு ஹாலிடே வேணும்.. அதனால் இந்தப்படத்த ஒத்துக்கன்னு சொன்னாங்க” என்ற ஜோதிகா இறுதியில் முத்தாய்ப்பாக “என்னுடைய கணவர்தான் எனது உலகம்” என்றபோது சூர்யாவின் முகத்தில் தான் எத்தனை வெட்கம்.

“படிக்கிறப்ப நான் ஒண்ணும் அண்ணியோட மிகப்பெரிய பேன்லாம் கிடையாது. ஆனா ‘மொழி’ படம் பாத்ததுல இருந்த பேன் ஆகிட்டேன்.. இந்த ‘வாடி ராசாத்தி’ பாடலே எல்லா வீட்டு பொண்ணுகளுக்கும் நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்கிறத சரியா சொல்லிருக்கு” என்ற கார்த்தி, ஒரு தயாரிப்பாளராக சூர்யா நீண்ட நேரம் மேடையிலேயே நிற்பதை பார்த்து, “அய்யா தயாரிப்பாளரனதுனால மேடையிலே நிக்கிறாரு பாருங்க.. இப்ப தெரிஞ்சிருக்கும் ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம்” என கலாட்டா பண்ணினார்.

“ஜோ மேடத்தை என்னோட படத்துல தான் ரீ என்ட்ரி கொடுக்க வைக்கனும்னு ஐடியா பண்ணி வச்சிருந்தேன்… ஆனா அதுக்குள்ளே ரோஷன் ஆண்ட்ரூஸ் முந்திக்கிட்டார். அனேகமாக இந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தோட டிவிடி, தனஞ்செயன் சார் மூலமா சூர்யாகிட்ட போனதால, அவர்தான் ஏதோ எதோ சதி பண்ணிட்டருன்னு நினைக்கிறேன்” என ஜோதிகாவை தனது படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவைக்க முடியாத மென்சோகத்தை வெளிப்படுத்தினார் பாண்டிராஜ்.

தான் பார்த்து பார்த்து செதுக்கிய தனது சிஷ்யனின், முதல் தயாரிப்பு முயற்சியை வாழ்த்த வந்திருந்த இயக்குனர் பாலா, “நான் சூர்யாவுக்காக வரவில்லை.. ஜோதிகாவோட ரசிகனா அவருக்குக்காத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்” என்றாரே பார்க்கலாம்.. ஜோதிகாவுக்கு அவர் படத்தில் நடிக்காத வருத்தமெல்லாம் அப்போதே தீர்ந்திருக்கும்.

சூர்யாவையும் ஜோதிகாவையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் இந்த விழாவிற்கு வந்து இருவரையும் வாழ்த்தியது தான் விழாவின் ஹைலைட்டே. கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, ஆகியோரும் தனகளது வாழ்த்துக்களை ஜோதிகாவுக்கு வழங்கினார்கள்.

“கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு” என போன வருடம் தம்பிக்கு (கார்த்தி) கண்களை கசியவைக்கும் பாடலை தந்த இசையமைப்பாளர், சந்தோஷ் நாராயணன், இந்த வருடத்தின் முதல் ஹிட்டாக அண்ணிக்கு (ஜோதிகா) “வாடி ராசாத்தி” பாடலை கொடுத்து மனதை நெகிழ வைத்துவிட்டார். அடுத்த வருஷம் அண்ணனுக்கும் (சூர்யா) இதேமாதிரி ஒன்னு போட்டுத்தந்துருங்க ஜி.

‘வாடி ராசாத்தி’ என ஜோவை வரவேற்க நாமும் தயாராவோமா..?

Comments are closed.