
சாலை பயணத்தையும் அதில் சாகசம் பண்ணும் கதாநாயகனையும் கதைக்களமாக வைத்து இதற்குமுன் சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. விக்ரம் நடித்துள்ள இந்த ‘10 எண்றதுக்குள்ள’ படமும் அந்த வகையை சேர்ந்த படம் தான் என்றாலும் அவற்றிலிருந்து இதை எப்படி வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்..?
அதி பயங்கர ஸ்பீடில் கார் ஓட்டும் ட்ரைவிங் ஸ்கூல் ட்ரைவர் விக்ரம். பத்து எண்றதுக்குள்ள எதிராளிகளின் கண்களில் மண்ணை தூவுவதில் சமர்த்தர். அவ்வப்போது காரில் போதைப்பொருட்களை கைமாற்றும் வேலைகளை செய்துகொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் தனது தங்கையின் மருத்துவ செலவை கவனிக்கிறார்..
இந்த நிலையில் ரவுடி பசுபதியின் அறிமுகம் கிடைக்க அவர்தரும் சின்னச்சின்ன வேலைகளை செய்து முடிக்கும் விக்ரம், உத்தரகாண்டில் உள்ள முசோரிக்கு இதேபோல காரில் சரக்கை ஒப்படைத்துவிட்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் போகும் வழியில் தான், அவருக்கு தான் கடத்துவது சரக்கு அல்ல, சமந்தா என்பது தெரியவருகிறது.
முசோரியில் உள்ள ஒரு ஜமீந்தார் வீடே சமந்தாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. தமிழ்நாட்டு அனாதையான சமந்தாவுக்கும் முசோரி ஜமீந்தார் குடும்பத்திற்கும் என்ன லிங்க் இருக்கமுடியும் என்பதை அறிய, சிலபல தடைகளை தகர்த்தெறிந்து அங்கே செல்கிறார் விக்ரம்.
ஆனால், தான் அங்கே சமந்தாவை அழைத்து சென்றது அவருக்கு சாவுமணி அடிக்கத்தான் என்பது விக்ரமுக்கு லேட்டாக தெரியவர, அந்த அதிர்ச்சிகரமான விஷயம் என்ன என்பதும், அவரது பத்து செகண்ட்ஸ் மூளை என்ன நடவடிக்கைக்கு அவரை தூண்டியது என்பதும் தான் க்ளைமாக்ஸ்.
கார் சேசிங், எதிரிகளை பந்தாடுவது என விக்ரமின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஸ்பீடு.. ஸ்பீடு.. ஸ்பீடு.. ஆனாலும் ஆரம்ப காட்சிகளில் அந்த ஓவர் ஸ்பீடு கொஞ்சம் திகட்டவே செய்தாலும், இடைவேளைக்குப்பின் அவரின் வேகத்திற்கு ஏற்றமாதிரி கதையும் ஸ்பீடை பிக்கப் பண்ணிக்கொள்கிறது.. காதல் காட்சிகளை விட, சண்டைக்காட்சியிலும் சாகசத்திலுமே நம்மை ஈர்க்கிறார் விக்ரம்.
சமந்தாவின் நடிப்பில் முந்தைய அவரது இரண்டு படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் க்ளைமாக்சில் அந்த பத்து நிமிடம் மட்டும் ‘வாரே வா’ என கைதட்ட வைக்கிறார் சமந்தா. அது ஏன் என்பதை தியேட்டரில் பார்த்துக்கொள்ளுங்கள்.
பசுபதி, ராகுல்தேவ், அபிமன்யூ என ஏரியாவுக்கு ஒரு வில்லனாக வருபவர்களில் பசுபதி காமெடியையும் அபிமன்யூ குரூரத்தையும் ராகுல்தேவ் சாந்தத்தையும் வில்லத்தனத்தில் கலந்து தந்திருக்கிறார்கள். ‘முனீஷ்காந்த்’ ராம்தாஸ், மனோபாலா இருவர் இருந்தாலும் காமெடியில் சத்து குறைவுதான்.
இமானின் இசையில் ஒப்பனிங் பாடலுக்கு தாராளமாக ஆட்டம் போடலாம். சமந்தாவை கடத்துவதற்கான காரணம் உண்மையிலேயே ட்விஸ்ட் தான்.. கடைசி பத்து நிமிடம் வித்தியாசம் காட்ட முடிந்த சமந்தா, ஒன்றரை மணி நேரம் ஸ்டீரியோ டைப்பில் ஒரேமாதிரியாக நடிப்பதை சகிப்பதுதான் சிரமமாக இருக்கிறது. அதேபோல சமந்தா பேசும் ‘அந்த’ டயலாக் சரியான அபத்தம்.
இயக்குனரும் விக்ரமும் சண்டைக்காட்சிகளிலும் சேசிங் காட்சிகளிலும் உயிரைக்கொடுத்து உழைத்து இருப்பது நன்றாக தெரிகிறது.. ஆனால் அந்த உழைப்பு இடைவேளை வரையிலான கதையோட்டத்திற்கு விழலுக்கு இறைத்த நீராக போனதை தவிர்த்திருக்கலாமே.. கோலிசோடா திரைக்கதையில் காட்டிய தீவிரத்தில் பாதிகூட இதில் இல்லை என்பதுதான் வருத்தம்.
10 எண்றதுக்குள்ள – ஜாலி அன்ட் திரில்லிங் ட்ரிப்..!
Comments are closed.