பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வணங்கான்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று விட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை மறுத்த தயாரிப்பு தரப்பு, முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக நேற்று இரவு இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.