சைக்கோவை விட பல மடங்கு சிறப்பான படமாக ‘அந்தநாள்’ இருக்கும் – நடிகர் ஆர்யன் ஷாம் நம்பிக்கை

302


அறிமுக நடிகர் ஆர்யன் ஷாம் நடித்து தயாரித்திருக்கும் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்படி செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும் என்பதால், ரிவைசிங் கமிட்டியிடம் முறையிட்ட படக்குழு ஒரு சில காட்சிகளை பிளர் செய்து தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது.

ரிவைசிங் கமிட்டிக்கு போகும் அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது, என்று ஆர்ய ஷாமிடம் கேட்டதற்கு, “நரபலியை மையப்படுத்தி தான் அந்தநாள் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழ் சினிமா மட்டும் அல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி, காட்சிகளையும் மிரட்டலாக படமாக்கியுள்ளோம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால், உங்கள் படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது, என்று மறுத்துவிட்டார்கள். அதனால், தான் ரிவைசிங் கமிட்டியை அனுகினோம். அவர்கள் சில திருத்தங்கள் கூறினார்கள், அதை செய்த உடன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத ஒரு படமாக ‘அந்தநாள்’ இருக்கும். நான் மிஷினின் ‘சைக்கோ’ படத்தில் நடிக்க வேண்டியது, என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், சைக்கோ படத்தை விட பல மடங்கு சிறப்பான படமாக அந்தநாள் இருக்கும். படம் அந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது. அதேபோல், இன்னொரு விஷயத்தை நான் இங்கே சொல்ல கடமை பட்டியிருக்கிறேன், ‘அந்தநாள்’ படத்தை கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பவர்கள் பார்க்க வேண்டாம், என் முதல் படமாக இருந்தாலும், இதை இங்கே சொல்ல வேண்டும், என்று தோன்றியது.” என்றார்.

இயக்குநர் மிஷ்கினுக்கு ரூ.1 கோடி அட்வாஸ் கொடுத்தது குறித்து கேட்டதற்கு, “சைக்கோ படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் மிஷ்கினுக்கு ரூ.1 கோடி அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால், அதில் நான் நடிக்கவில்லை. அதனால், அந்த பணத்தை திரும்ப கேட்டேன், அது பற்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், இப்போது அந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் கொடுத்து விட்டார். அதனால், அவர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். அதேபோல், அன்று அவர் கொடுக்கவில்லை என்பதை ஊடங்கள் முன்னிலையில் கூறினேன். இப்போது அவர் பணம் கொடுத்துவிட்டதையும் ஊடகங்கள் முன்பு சொல்ல வேண்டும் என்று மிஷ்கின் தரப்பு கேட்டுக்கொண்டார்கள், அதனால், இந்த இடத்தில் அவர் பணம் கொடுத்ததை பதிவு செய்கிறேன்.

இயக்குநர் மிஷ்கினுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, இப்போதும் அவருடன் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். அவர் தற்போது ரொம்ப பிஸியாக இருப்பதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாம் பேசலாம், என்று கூறியிருக்கிறார். அதனால், அவருடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு வந்தால் நிச்சயம் பண்ணுவேன்.” என்றார்.

பிரம்மாண்ட நாயகன் படத்தில் நடித்தது குறித்து கேட்ட போது, “திருப்பதி ஏழுமலையானை பற்றிய படம் தான் ‘பிரம்மாண்ட நாயகன்’. அதில் நான் திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் என் நடிப்பையும் தோற்றத்தையும் பார்த்து திருப்பதி தேவஸ்தானம் வெகுவாக பாராட்டியது. அவர்கள் எனக்கு அளித்த பாராட்டு கடிதத்தில் யூத் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது சிலருக்கு பிடிக்கவில்லை, உடனே என்னை மிரட்ட தொடங்கிவிட்டார்கள். என்னை மட்டும் அல்ல, திருப்பதி தேவஸ்தானத்தையே தொடர்பு கொண்டு, எப்படி நீங்கள் யூத் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கலாம், என்று கேட்கிறார்களாம். அப்படி கேட்பவர் பெரிய ஆள் தான், ஆனால் அவர் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. மொத்தத்தில் நான் சினிமாவில் வந்துவிட கூடாது என்று பலர் விரும்புகிறார்கள், ஆனால் என்ன பிரச்சனை வந்தாலும், அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவேன்.” என்றார்.

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவரான ஆர்யன் ஷாம், நடிக்கும் முதல் படமான ‘அந்தநாள்’ படத்தை ஏவிஎம் பேனரில் வெளியிட இருந்தார்களாம். ஆனால், படம் நரபலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாலும், படத்திற்கு ஏ சான்றிதம் கொடுக்கப்பட்டிருப்பதாலும், இதுபோன்ற படத்தை ஏவிஎம் பேனரில் வெளியிட வேண்டாம் என்று கூறிய ஆர்யன் ஷாம், தனது சொந்த பேனரிலேயே வெளியிடுவதாக கூறினார்.

மேலும், தனது முயற்சிகள் அத்தனையிலும் உறுதுணையாக இருக்கும் மனைவி அபர்ணாவுக்கு நன்றி தெரிவித்தவர், நான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு பின்னாடி என் மனைவியே இருப்பார், என்றும் கூறினார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்திருக்கும் ‘அந்தநாள்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

Comments are closed.