’க்’ விமர்சனம்

220

ikk-review-bf
நடிகர்கள் : யோகேஷ், அனிகா, குரு சோமசுந்தரம், ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன்
இசை : கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தயாரிப்பு : தர்ம்ராஜ் பிலிம்ஸ்
இயக்கம் : பாபுதமிழ்

தலை மற்றும் காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாயகன் யோகேஷ், அங்கு ஒரு கொலை சம்பவத்தை பார்க்கிறார். ஆனால், போலீஸ் விசாரணையில் அப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதையடுத்து யோகேஷ் தான் பார்த்த கொலை சம்பவம் தொடர்பாக அறிய முயற்சிக்கும் போது நடக்கும் சம்பவங்களும், அதன் ரகசியங்கள் நிறைந்த அதன் பின்னணியும் தான் ‘க்’ படத்தின் கதை.

படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளையும் உற்று நோக்கும்படி வடிவமைத்திருக்கும் இயக்குநர் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம் கவனத்தை ஈர்க்கும் விதமாக திரைக்கதையை சஸ்பென்ஸாக நகர்த்தி செல்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் யோகேஷ் முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தை அசால்டாக கையாண்டுள்ளார். குழப்பமான தனது மனநிலையை வெளிப்படுத்தும் இடங்களில் அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

யோகேஷின் மனைவியாக நடித்திருக்கும் நாயகி அனிகா, கதைக்கு பெரிய அளவில் தொடர்பில்லாதவராக இருந்தாலும், கவனம் ஈர்க்கும் விதத்தில் அவர் வரும் காட்சிகள் அமைந்திருக்கிறது.

ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் முழு படத்தையும் தனது நடிப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் குரு சோமசுந்தரம். பார்வையிலேயே பல விஷயங்களை கடத்தும் அவர், தனது நடிப்பு மூலம் திரைக்கதையில் பரபரப்பை அதிகரித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களுடைய குழப்பங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று உதாரணம் சொல்லும் வகையில் இயக்குநர் பாபுதமிழ் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

ஏற்கனவே சில படங்களில் சொல்லப்பட்ட ஒரு கருவை வித்தியாசமான திரைக்கதையோடு நகர்த்தி செல்லும் இயக்குநர் பாபுதமிழ், அடுத்தது என்ன நடக்கும், ஏன் இப்படி நடந்தது, என்ற எதிர்ப்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்கிறார். அதே சமயம், குழப்பங்களுக்கு அவர் சொல்லும் தீர்வுகள் எளிமையான முறையில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘க்’ வித்தியாசமான முயற்சி

Comments are closed.