
நடிகர்கள் : விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சாய் சதீஷ், வெற்றி, நட்ராஜ், சுகுமார் சண்முகம் மற்றும் பலர்
இசை : ஹம்மர் எழிலன்
ஒளிப்பதிவு : எம்.பரணிகுமார்
தயாரிப்பு : ஆர்.என்.நனு
இயக்கம் : : விஜயபாஸ்கர்
திருநங்கைகள் பலர் பிச்சை எடுப்பது, விபச்சாரம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திருநங்கைகள் விஜி மற்றும் டோரா ஆசாரி என்பவரிடம் கூலிப்படையாக வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் கொடுக்கும் பணத்திற்காக கொலை செய்து வரும் இவர்களில், டோராவுக்கு ஆசாரியின் மகன் மீது காதல் வர, அவரும் டோராவை காதலிக்கிறார். இதற்கிடையே, திருநங்கை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க விஜியும், டோராவும் கிளம்புகிறார்கள். மறுபக்கம் டோராவின் காதல் பற்றி அறிந்துக் கொண்ட ஆசாரி, டோரா மற்றும் விஜி பழி தீர்க்க நினைக்கும் கொலையாளியின் தந்தைக்கு உதவி செய்யவும் முடிவு செய்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை, பதற வைக்கும் காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் சொல்வது தான் ‘பில்டர் கோல்டு’.
கதையின் முதன்மை கதாப்பாத்திரத்தில் விஜி என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருக்கும் விஜயபாஸ்கர், திருநங்கையாகவே வாழ்ந்திருப்பதோடு, கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
திருநங்கை டோரா சினிமாவுக்கு புதியவர் என்றாலும், அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அசால்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
திருநங்கை சாந்தியாக நடித்திருக்கும் சுகுமார் சண்முகம், பள்ளி மாணவனின் தந்தையாக நடித்திருக்கும் நடராஜ், டோராவின் காதலனாக நடித்திருக்கும் சாய் சதீஷ் என அனைத்து நடிகர்களும் புதியவர்கள் என்றாலும், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போவதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக, பள்ளி மாணவன் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றியின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பெற்றோர்கள் கொடுக்கும் செல்லத்தால் பிள்ளைகள் எத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அந்த வேடத்தின் சித்தரிப்பு பயங்கரமாக இருக்கிறது.
ஹம்மர் எழிலனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறை சொல்ல முடியாதபடி உள்ளது. எம்.பரணிகுமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
திருநங்கைகள் பற்றி பல தமிழ்ப் படங்கள் பேசியிருந்தாலும், ஒரு முழுமையான திருநங்கை படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படம், டாக்குமெண்டரி படம் போல் அல்லாமல், முழுமையான கமர்ஷியல் படமாக உள்ளது.
திருநங்கைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை மட்டும் இன்றி, அவர்களுடைய மகிழ்ச்சிகரமான மற்றும் ஒற்றுமையான வாழ்க்கை முறை பற்றியும் சொல்லியிருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர், பல விஷயங்களை வெளிப்படையாக பேசி கைதட்டல் பெருகிறார்.
மொத்தத்தில், இந்த ‘கோல்டு பில்டர்’ திருநங்கைகளின் படமாக இருந்தாலும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாகவும் உள்ளது.
Comments are closed.