கோலாகலமாக நடைபெற்ற ‘மஞ்சக்குருவி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

345

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், அரங்கன் சின்னதம்பி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மஞ்சக்குருவி’. இதில் கதையின் நாயகனாக கிஷோர் நடித்திருக்கிறார். வில்லனாக குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார். இவர்களுடன் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செளந்தர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். கே.எம்.நந்தகுமார் கலையை நிர்மாணித்துள்ளார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

ஒரு ராஜாளி பறவையை ‘மஞ்சக்குருவி’-யாக மாற்றுவது தான் படத்தின் கதை. அண்ணன், தங்கை பாச போராட்டத்தை உயிரோட்டமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்து சிறப்பு விருந்தினர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Comments are closed.