பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன் அவ்வப்போது வீறுகொண்டு விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களை மிரட்சியில் ஆழ்த்தி வருகிறான். அந்த வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஏற்கனவே நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ.வி.பிரகாஷும் இப்போது ‘பென்சில்’ படம் மூலமாக ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஒருசில ஆல்பங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொண்டவர் தற்போது கதை எழுதும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
அப்படி என்றால் யுவ்ன் சங்கர் ராஜா? யெஸ்.. அவரும் நடிகராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அவரது நண்பரும் ‘பில்லா-2’ படத்தின் இயக்குனருமான சக்ரி டோலட்டியின் டைரக்ஷனில்தான் யுவன் நடிக்கப்போவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இதைப்பற்றி சக்ரியிடம் கேட்டால் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்ல மறுக்கிறார்.
ஆனால் “நானும் யுவனும் மியூசிக் தவிர வேறு சில தளங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இப்போது நான் இயக்கிவரும் குறும்படத்திற்கு கூட யுவன் தான் இசையமைத்து வருகிறார். ஆனால் அவர் நடிப்பது பற்றி இப்போதே என்னால் கருத்து சொல்ல முடியாது” என நாசூக்காக நழுவுகிறார் சக்ரி டோலட்டி.