விஜய் சேதுபதி – விஷ்ணு இணையும் ‘இடம் பொருள் ஏவல்’

53

முதலில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம். இயக்குனர் பாலாவின் முதல் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். இரண்டாவது படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மூன்றாவது படமான பிதாமகனில் விக்ரம், சூர்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்தார்கள். அதேபோல தனது முதல் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய விமலையும் மூன்றாவது படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயனையும் கதாநாயகர்களாக வைத்துத்தான் தனது நான்காவது படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வை இயக்கினார் டைரக்டர் பாண்டிராஜ். தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் சில நடிகர்கள். இதைத்தான் ‘குருபக்தி’ என்பார்கள்.

சரி ஃப்ளாஸ்பேக் போதும்..விஷயத்திற்கு வருவோம். இதேபாணியைத்தான் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார். தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார் சீனு ராமசாமி. இந்தப்படத்தில் சீனு இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதுபற்றி விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “சீனுராமசாமி சாருடன் மீண்டும் இணைவது சந்தோஷமாக இருக்கிறது. கூடவே என்னுடைய ஃபேவரைட் நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதும் யுவன் இசையமைக்கும் படத்தில் முதன்முதலாக நடிப்பதும் அதை திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பதும் பெருமை அளிக்கிறது. நான் தற்போது நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார் விஷ்ணு.

Leave A Reply

Your email address will not be published.