விடியும் முன் – விமர்சனம்

81

பெண்களை வைத்து தொழில் செய்யும் புரோக்கர் அமரேந்திரன், பாலியல் தொழிலாளியான பூஜாவிடம் ஒரு பெரிய மனிதருக்கு இளம் சிறுமி ஒருத்தி தேவைப்படுவதாக கூறுகிறார். பூஜாவும் தனது முன்னாள் முதலாளியிடம்(?) பேசி அவனிடருந்து சிறுமி மாளவிகாவை அந்த பெரிய மனிதரிடம் அழைத்துச்செல்கிறார். ஒருகட்டத்தில் தன்னைக் காத்துக்கொள்ள அந்த காமுகனை கத்தியால் குத்துகிறாள் சிறுமி. பூஜாவும் சிறுமியை காப்பாற்ற அந்த மனிதரை தாக்கிவிட்டு சிறுமியுடன் ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். மறுநாள் அந்த கொடூரன் இறந்தும் போகிறான்.

அந்தப்பெரிய மனிதனின் மகன் வினோத் கிஷன் தன் தந்தையைக் கொன்ற அவர்கள் தனக்கு வேண்டும் என மிரட்ட, அமரேந்திரனும் அவனது நண்பரான ஜான் விஜய்யை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டு இருவரையும் தேடுகிறார்கள். ஒருகட்டத்தில் கண்டுபிடித்தும் விடுகிறார்கள். அதன்பின் நடப்பது திக்..திக் க்ளைமாக்ஸ்.

பாலியல் தொழிலாளியாக பூஜா.. அவரது கேரக்டர்தான் அப்படியே தவிர படத்தில் அருவறுக்கத்தக்க காட்சிகள் எதுவுமே இல்லை. வில்லன்களிடமிருந்து சிறுமியைக் காப்பாற்ற போராடும் ஒரு பெண் போராளிதான் அவர் உருவில் நம் கண்களுக்கு தெரிகிறார். படம் இறுதிவரை அந்த பதட்டத்தையும் பயத்தையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பூஜாவுக்கு சமமான வேடம் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு. முன்னாள் பாலியல் தொழிலாளியாக இருந்து அதிலிருந்து விடுபட்டு ஸ்ரீரங்கத்தில் புதிய அடையாளத்துடன் வாழும் யதார்த்த பெண்மணியாக நடித்திருக்கிறார். அதிலும் ஜான்விஜய்யிடம் அவர் மாட்டிக்கொள்ளும் காட்சியில் மிரட்சியை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறுமி நந்தினியாக வரும் மாளவிகா மணிக்குட்டன் தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது துறுதுறு நடிப்பால் அதை அனாயசமாக ஊதித்தள்ளி விடுகிறார். தனக்கு நடக்கப்போகும் பயங்கரம் என்னவென்று தெரியாமல் பூஜாவுடன் வரும்போதும் அவருடன் தப்பித்துப்போய் ஸ்ரீரங்கத்தில் மாட்டிக்கொள்ளும்போதும் இந்தப்பொண்னுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என நம்மை பதைபதைக்க வைக்கிறது.

காமக்கொடூர பெரிய மனிதரின் மகன் சின்னையாவாக ‘நான் மகன் அல்ல’ வினோத் கிஷன். படத்தில் எப்படிப்பார்த்தாலும் இவருக்கு மொத்த வசனமுமே ஒரு பக்கத்தை தாண்டாது. ஆனால் தன் தந்தையைக் கொன்ற சிறுமியையும் பூஜாவையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உத்தரவு போட்டு தேடவைப்பதிலேயே இறுதிவரை நம்மை மிரட்டுகிறார்.

படத்தின் இரண்டு முக்கிய தூண்கள் லங்கனாக வரும் ஜான்விஜய்யும் சிங்காரமாக வரும் அமரேந்திரனும் தான். ஆரம்பத்தில் ஜாலியாகவே பூஜாவையும் சிறுமியையும் தேடும் ஜான்விஜய் ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்ததும் தன் புதியமுகத்தை காட்டுகிறார். அமரேந்திரனும் வில்லத்தனத்துடன் கூடிய நகைச்சுவையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது க்ரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை. படத்தின் பாடல்களையும் இவரே தான் எழுதிருக்கிறார் என்றாலும் த்ரில்லர் படம் என்பதால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற ஒளிப்பதிவில் சிரத்தை காட்டியிருக்கிறார் சிவகுமார் விஜயன். அவ்வப்போது பிளாஸ்பேக்கில் கதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு கைகொடுத்துள்ளதோடு போரடிக்காமல் படத்தை நகர்த்துகிறது சத்தியராஜின் படத்தொகுப்பு.

இன்றைய சூழலில் வீட்டில் அன்பும் பாசமும் கிடைக்காத சிறுமி ஒருத்திக்கு வெளியில் என்னவெல்லாம் கொடுமை நேரலாம் என்பதை மனதில் அறையும் வண்ணம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி கே.குமார். அதேபோல காட்சிகளை படமாகிய விதத்திலும் கதை சொல்லிய விதத்திலும் ஹாலிவுட்டின் நேர்த்தி தெரிகிறது.

ஒரு கோபுரத்தை மட்டுமே அடையாளமாக வைத்து ஜான்விஜய் பூஜா இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது, சிறுமி அந்தக் காமக்கொடுரனை என்ன செய்தாள் என்பதற்கு மிகப்பெரிய பில்டப் கொடுத்துவிட்டு அதை சாதாராணமாக சொல்லியிருப்பது, என படத்தில் சின்னச்சின்ன லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் தன் முதல் படத்திலேயே ஒரு த்ரில்லருக்குரிய அம்சங்களுடன் ஒரு விழிப்புணர்வு செய்தியையும் தந்திருப்பதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.

‘விடியும் முன்’ அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

Leave A Reply

Your email address will not be published.