வஹிதா ரஹ்மான். இந்தி சினிமாவின் மூத்த நடிகையான இவரைப் பற்றி நம்மவர்கள் கேள்விப்படிருப்பார்களே தவிர, அவரைப்பற்றிய விபரங்களை அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். 1950 மற்றும் 60கள் வரை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்தான் இந்த வஹிதா ரஹ்மான். இப்போது தமிழில் விஸ்வரூபம்-2வில் கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்.
வஹிதாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பிரிக்கமுடியாத பந்தம் உண்டு. அவர் தனது திரையுலக வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தது ஜெமினிகணேசன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ படத்தின் மூலம்தான். “ஏரு தூக்கிப் போவாயே அண்ணே சின்னண்ணே” என்ற சூப்பர்ஹிட் பாடலில் ஆடியவர் இவரேதான்.
அதேபோல 1956ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் பானுமதியுடன் சேர்ந்து நடனமாடும் கிளப் டான்ஸராகவும் நடித்திருந்தார் வஹிதா ரஹ்மான். இந்தியில் நூறு படங்களுக்கு மேல் நடித்த இவர் தமிழில் நடித்திருப்பது மேலே சொன்ன இரண்டு படங்களில் மட்டும்தான். இப்போது 57 வருடங்கள் கழித்து அவரை தாய்வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் கமல்.