எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கும் திரையுலகில் ஒரு இடைவெளி விழுவது சகஜம்தான். அது அவர்களின் திறமை குறைந்துவிட்டது என்பதால் அல்ல.. மாறிவரும் காலத்திற்கேற்ப தங்களை அப்டேட் செய்துகொள்வதற்காகத்தான். ஆனால் எல்லோரும் தங்களது இடைவெளி காலத்தை சரியாக பயன்படுத்துகிறார்களா என்ன?
அந்தவகையில் சினிமாவிலிருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தாலும் இசையமைப்பாளர் பரத்வாஜ் செய்திருக்கும் செயல் நிச்சயமாக அனைவரும் போற்றவேண்டிய ஒரு சாதனைதான். தனக்கு கிடைத்த இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி இருக்கிறார் பரத்வாஜ்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளுக்கு மூன்று விதமாக இசையமைத்து இருக்கிறார். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதற்காக உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் பாடகர்களை பாட வைத்திருப்பதுதான். நமக்கு தெரிந்த பாடகர்களையும் சேர்த்து மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்.
எப்படி இந்த எண்ணம் தோன்றியது என பரத்வாஜிடம் கேட்டால், “எந்த தலைமுறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. அதை வெறும் வார்த்தையால் சொல்வதைவிட, இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன். ஜனவரி 17ஆம் தேதி அன்று திருவள்ளுவர் தினம் அன்று இதை வெளியிட இருக்கிறேன்” என்கிறார் பரத்வாஜ்.
தமிழ்கூறும் நல்லுலகம் உங்களுக்கு என்றுமே கடமைப்பட்டுள்ளது பரத்வாஜ்.