பள்ளி மாணவி ரஸ்னாவை (அட.. பேர் தாங்க) விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் விடலையான விஜய் வசந்த். ரஸ்னாவோ தண்ணீர் குடிப்பதற்கு கூட, அதை டம்ளரில் ஊற்றி, கையில் எடுத்து, அப்புறமா குடிக்கணுமா. இதுல இவ்வவளவு வேலையிருக்கா.. என கேட்கும் அளவுக்கு சோம்பேறி..
ரஸ்னாவின் தாய்மாமன் பவனுக்கு ரஸ்னாவை திருமணம் செய்து வைக்க அவர் அம்மா நினைக்க, ரஸ்னாவோ சுற்றுலா போவதாக சொல்லி விஜய் வசந்த்துடன் கொடைக்கானலுக்கு எஸ்கேப் ஆகிறார். ஆனால் சென்னையில் வைத்தே அவர்களை பிடிக்கும் பவன், அவர்களுக்கு 15 நாட்கள் டயம் கொடுத்து உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடிகிறதா என நிரூபியுங்கள் என்று கூறி சில நிபந்தனைகளுடன் அவர்களை அனுப்பி வைக்கிறார்.
கொடைக்கானலில் இருந்து ஒரே வாரத்தில் திரும்பிவரும் இருவரும் எலியும் பூனையுமாக திரும்பி வருகிறார்கள்.. அப்படி அங்கே என்ன நடந்தது… ரஸ்னாவை திருமணம் செய்தது யார் என்பதற்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
பக்குவமடையாத நிலையில், காதலிக்கும்போது இருக்கும் கவர்ச்சி, ஒன்று சேர்ந்து வாழும்போது பூஜ்யமாகிவிடும்.. படிக்கும் நேரத்தில் படிப்பு, அப்புறம் தான் காதல், கல்யாணம் எல்லாம் என்கிற கருத்தை காமெடியாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கே.ராமு.
விடலை கேரக்டரில் விஜய் வசந்த் ஒகே.. மனிதருக்கு இடைவேளைக்குப்பின் தான் உண்மையான வேலையே.. கதாநாயகி ரஸ்னாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் அலுப்பு தட்டினாலும் போகப்போக பிக்கப் பண்ணிவிடுகிறார். கொடைக்கானலில் விஜய் வசந்தை அப்பாவித்தனம் என்கிற பெயரில் படுத்தி எடுக்கும் பாடு ஜாலி எபிசோட்..
ரஸ்னாவின் தாய்மாமனாக வரும் பவனுக்கு கம்பீரமான கதாபாத்திரம்.. காதலை பக்குவத்துடன் அணுகும்போது அவர் கதாபாத்திரத்தின் மேல் மரியாதை வருகிறது. ஆனால் தனது அக்கா மகளை காதலனுடன் கையும் களவுமாக பிடித்த பிறகும் அவர்களை கொடைக்கானல் அனுப்பி வைப்பதெல்லாம் நாடகத்தனமான விஷயம்.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் மயில்சாமியும் அவரிடம் இருக்கும் சொப்பனசுந்தரியின் காரும் மட்டுமே நம் மனதில் நிற்கின்றனர். பாடல்கள் இருபது நிமிட இடைவெளியை நிரப்ப மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. மலைக்காட்சிகளில் எல்.கே.விஜய்யின் கேமரா சுறுசுறுப்பு காட்டியிருக்கிறது..
விவரம் அறியாத வயதில் காதலிக்கும் விடலைகளில் ஒரு சிலர் இந்தப்படத்தை பார்த்தால் ஒருவேளை திருந்தக்கூடும் என்பதே ஓரளவேனும் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
Comments are closed.