குழந்தைகளின் உலகமே தனியானது. அதை குழந்தைகளின் மனநிலையுடன் அவர்களுக்கு சரிசமமாக இறங்கிப்பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் படம்தான் தங்க மீன்கள்.
கற்றது தமிழ் ராமின் இரண்டாவது படைப்பு என்பதாலும், அவரே நாயகனாக நடித்திருப்பதாலும், நீண்ட நாட்கள் இழுபறிக்குப்பின் வெளியாகி இருப்பதாலும் இந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானது உண்மை. அந்த எதிர்பார்ப்பிற்கு ராம் தீனி போட்டிருக்கிறாரா?
தன் மகள் எதைக்கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் ஒரு தகப்பன், படிப்பே ஏறாத அல்லது பள்ளிக்குப்போகவே விரும்பாத ஒரு மகள்… இவர்களுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் படத்தின் அடிநாதம். அதை கல்வி எனும் நூலில் கட்டி மாலையாக தொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராம் எந்த இடத்திலும் அந்நியமாக தெரியாதபடி ஒரு இயல்பான அப்பாவாகவே உலாவுவது அந்த கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது. மகளிடம் காட்டும் பாசம், மகளுக்கு நாய்க்குட்டி வாங்குவதற்காக அவர் படும் சிரமம், பணக்கார தந்தையிடம் அவர் காட்டும் வீராப்பு, அதிகமாக சம்பாதிக்கமுடியாத விரக்தி என கலவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ராம்.
படத்தில் ராமின் மகளாக வாழ்ந்திருக்கும் சாதனாவைத்தான் கதாநாயகி என்று சொல்லவேண்டும். சொல்லப்போனால் ராமுடன் நடிப்பில் போட்டிபோட்டிருக்கிறாள் என்றே சொல்லவேண்டும். சாதனாவுக்கு தோழியாக நடித்திருக்கும் அந்த ‘பூரி’ குழந்தையும் துறுதுறு ரகம் தான். தங்கமீன்கள் என்பதற்கு அந்தக்குழந்தைகள் விளையாட்டாக வைத்திருக்கும் அர்த்தம் தெரியவரும்போது நமக்கு பகீர் என்கிறது.
ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோரின் கொஞ்சம் கூட மிகை இல்லாத நடிப்பை பராட்டியே ஆகவேண்டும். கணவனுடன் சண்டைபோடும் இடத்திலும் அதே கணவன் இரவில் தாமதாக வந்து அதன்பின் சைக்கிளை எடுத்துக்கொண்டு இரவில் குடும்பத்துடன் சுற்றிவர அழைக்கும் இடத்திலும் என ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் உணர்ச்சிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பள்ளிக்கூட டீச்சராக பத்மபிரியா.. பள்ளியில் குழந்தைக்கும் அவருக்குமான புரிதல் அழகான ஒரு கவிதை. நீண்ட நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் பத்மபிரியாவை பார்ப்பது ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் நம்மை தாலாட்டுகிறது. அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு ராமின் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறது.
படத்தில் தந்தை மகளுக்கான பாசத்தைப்பற்றி சொல்லவந்த இயக்குனர் ராம், திடீரென ஆங்கில கல்விமுறை, தமிழ்வழிக்கல்வி என சற்றே தடம் மாறியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் அதிலும் சரியான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார் ராம்.
ராமின் குறைவான வருமானம், வசதியான அவரது தந்தைக்கும் அவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என சில விஷயங்களில் ராம் ஆழமான கவனம் காட்டவில்லை. ஆனால் எந்தவித வியாபார நோக்கமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய அதிலும் கட்டாயம் குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு படமாக தங்க மீன்களை எடுத்த ராமை விமர்சிப்பதைவிட, பாராட்டுவதுதான் சரியாக இருக்கும்.
நடிகர்கள் : ராம், ஷெல்லி கிஷோர், பத்மப்ரியா, சாதனா,
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா
இயக்குனர் : ராம்
தயாரிப்பு : கெளதம் மேனன், ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம்