தலைவா படத்தை திரையிட இன்னும் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கவேண்டும் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தலைவா படக்குழு. படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பத்திரிக்கையாளர்களின் முன்னால் கண்ணீர்விட்டு அழுது முதல்வரிடம் கோரிக்கை வைத்துவிட்டார். படத்தின் ஹீரோ விஜய்யும் முதல்வரிடம் வைத்துள்ள வேண்டுகோளும் இதுவே.
எந்த இடத்தில் படம் சிக்கிக்கொண்டு வெளியிடமுடியாமல் இருக்கிறது என்று சொல்லமுடியாத இந்த சூழ்நிலையில் விஜய், இயக்குநர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக்குழுவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப்படுள்ளது.
இந்த உண்ணாவிரத்தில் கலந்துகொள்ள சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் ஏ.எல்.விஜய். அனுமதி கிடைத்தால் தானும் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய்.
படத்தை திரையிட விடாமல் தடுப்பதற்கு விஜய்யின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் காரணமா, அல்லது படத்தை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிடுவதுதான் காரணமா, இல்லை இதற்குமுன் விஜய்யின் படங்களை வாங்கி நட்டமடைந்து அவரின் தந்தையால் உதாசீனப்படுத்தப்பட சில விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் பழிவாங்கும் செயலா என்பது புரியாமல் இதற்கு எப்படி தீர்வு காணப்போகிறோம் என்ற குழப்பத்திலேயே உண்ணாவிரதத்தின் மூலம் பொதுமக்களின் ஆதரவை திரட்ட, தலைவா படக்குழு களம் இறங்கியிருப்பதாக தெரிகிறது.