சமீபத்தில் டெல்லி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம் அதில் ஒருவன் மட்டும் பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுவன் என்பதால் அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் நாடு முழுவதும் இந்த தீர்ப்பின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பின்மீது மேல்முறையீடும் செய்யப்பட்டு வருகிறது. மலையாள நடிகையான ஸ்வேதா மேனனும் இந்த தீர்ப்பின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த தீர்ப்பு என்னை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் கழித்து இருபத்தொரு வயதானபின் மீண்டும் அவன் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடமாட்டான் என்பது என்ன நிச்சயம்? நமது சட்டங்கள் எல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை. அதனை மாற்றி எழுதவேண்டிய தேவை இப்போது வந்திருக்கிறது. நீதி தன்னை நிரூபிக்க வேண்டிய தருணம் இது” என ஆதங்கத்துடன் கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.