இன்று ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில் பெரும்பங்கு படத்தின் டைட்டிலுக்குத்தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்கள் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் புதியவர்களின் படங்களுக்கு டைட்டில் தான் மிகப்பெரிய விளம்பரம். அதனாலேயே கதையை விட ரசிகர்களை கவரும் விதமான வித்தியாசமான டைட்டில்களை புதிய இயக்குனர்கள் யோசித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ‘ஷோ போட் ஸ்டூடியோஸ்’ என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படத்திற்கு ‘ஆந்திரா மெஸ்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நான்கு பேர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் ஒன்று சேர்கிறார்கள். அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ முயற்சிக்கும் அவர்களது வாழ்கை பயணமே ‘ஆந்திரா மெஸ்’. பல விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவத்தில் ஜெய் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். டைட்டிலைப்போல கதையும் வித்தியாசமாக இருக்கும் என நம்புவோம்.