சப்தமஸ்ரீ தஸ்கரா – விமர்சனம் (மலையாளம்)

95

நடிகர்கள் : பிருத்விராஜ், இந்திரஜித் (நட்புக்காக), ஆசிப் அலி, நெடுமுடிவேணு, ரீனு மேத்யூஸ், சனுஷா, ஜாய் மேத்யூ, செம்பான் வினோத், நீரஜ்மாதவ்  மற்றும் பலர்

கதை : அனில் ராதாகிருஷ்ணன் மேனன்

இசை : ரெக்ஸ் விஜயன் (பாடல்கள்), சுஷின் ஷ்யாம் (பின்னணி)

ஒளிப்பதிவு : ஜெயேஷ்  நாயர்

இயக்கம் : அனில் ராதாகிருஷ்ணன் மேனன்

ஜெயிலில் இருக்கும் பிருத்விராஜ், ஆசிப் அலி, நெடுமுடிவேணு, செம்பான் வினோத், நீரஜ் மாதவ் மற்றும் இருவர் என ஏழு பேர் சேர்ந்து சிறையில் நட்பு கூட்டணி அமைக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஜெயிலுக்கு வர ஒவ்வொரு காரணம் இருக்கின்றன. இதில் நெடுமுடி வேணுவின் பணத்தை ஏமாற்றி அபகரித்த ஜாய்மேத்யூதான் பிருத்விராஜின் மனைவியின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர் என்பது தெரியவருகிறது.

இதனால் அவரை பழிவாங்க திட்டமிடும் இந்த  இருவரும் மற்ற ஐந்து பேரையும் கூட்டணி சேர்த்து ஜாய்மேத்யூவிடம் உள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடிக்க முடிவு செய்கின்றனர். அதற்காக ஜெயிலில் இருந்தெல்லாம் யாரும் தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

ஒவ்வொருவராக ரிலீசான பின்னர் அனைவரும் நெடுமுடி வேணுவின் வீட்டில் கூடுகின்றனர். ஜாய்மேத்யூவின் பணம் முழுவதும் அவர் நடத்திவரும் மருத்துவமனையில் ஐ.சி.யூ என பெயரிடப்பட்டுள்ள அறை ஒன்றிற்குள் லாக்கர் அமைத்து அதில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கின்றனர்.

நெடுமுடி வேணுவின் மகளான சனுஷா அந்த மருத்துவமனையிலேயே நர்சாக வேலை பார்ப்பதால் தங்களது திட்டத்திற்கு அவரை உதவியாக பயன்படுத்துகின்றனர்.. அந்த மருத்துவமனையின் கட்டட அமைப்பை  கவனித்து அதன்படி கொள்ளையடிப்பதற்கான திட்டத்தை தீட்டுகின்றனர்.

விரைவில் அந்த ஊரில் திருவிழா நாள் வரவே, அந்த நாளன்று இரவு தங்களது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்கின்றனர்.   ஜாய்மேத்யூ மற்றும் அவரது தம்பிகள் இருவரிடமும் உள்ள லாக்கர் சாவிகளின் அச்சுக்களை சாமார்த்தியமாக எடுத்து ட்யூப்ளிகேட் சாவிகள்  தயாரிக்கின்றனர்.

திருவிழா தினத்தன்று அண்ணன் தம்பிகள் மூவரும் விழாக்கொண்டாத்தில் இருக்க, இந்த ஏழு பேரும் சனுஷாவின் உதவியுடன் கட்டடத்தின் பின்பக்கமாக நுழைந்து லாக்கரில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பணத்தை மூட்டைகளாக கட்டி கட்டடத்திற்கு வெளியே தாங்கள் ஏற்கனவே  நிறுத்தி வைத்திருக்கும் கழிவு நீர் எடுத்துச்செல்லும் ஆட்டோக்களில் ஒன்றில் உள்ள டேங்கில் அடைக்கின்றனர்.

ஆனால் இவர்கள் லாக்கரை திறந்த அடுத்த நொடியே அண்ணன் தம்பி மூவரின் செல்போனிலும் அதற்கான எச்சரிக்கை அலாரம் அடிக்க மூவரும் அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு விரைகின்றனர். ஆனால் அதற்குள் ஆட்டோக்கள் எல்லாம் கிளம்பி திசைக்கொன்றாக பறக்கின்றன..

அவற்றை பின் தொடரும் இந்த மூவரும் ஆளுக்கொரு ஆட்டோவை தடுத்த நிறுத்த, அந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள டேங்கில் கழிவுகள் தான் இருக்கின்றன. ஒருவழியாக அவர்கள் மூவரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு திட்டமிட்ட இடத்தை அடையும் ஆட்டோக்களில் ஒன்று மட்டும் குறைகிறது. அதுதான் பணத்தை சுமந்துவரும் ஆட்டோ.. அதை ஓட்டிவந்தவர் தான் பிருத்விராஜ்..

அந்த ஆட்டோ மட்டும் கடைசி வரை வரவே இல்லை.. சில நாட்கள் கழித்து பிருத்விராஜ் பற்றி விசாரிக்க, அவர் சொல்லியிருந்த இடத்திற்கு போனால் அவர் சொன்ன பெயரில் வேறு ஒரு நபர் (இந்திரஜித்) இருக்கிறார். இறந்துபோனதுகூட அவருடைய மனைவிதான்… அப்படி என்றால்  பிருத்விராஜ் தன்னுடன் இருந்த ஆறுபேருக்கும் நாமத்தை சாத்திவிட்டாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

தன்னை ஏமாற்றியவனிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்ற, நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் சுவராஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன்.

படத்தின் பிரதான கதாநாயகன் பிருத்விராஜ் தான் என்றாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை தன்னுடன் கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி  தேவையான இடங்களில் மட்டும் உள்ளே நுழைகிறார்.   ஆனால் அவர் அப்படி அமைதியாக இருப்பதன் காரணம் க்ளைமாக்சில் நமக்கு தெரியவரும்போது நாம் வியப்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறோம் என்பது உண்மை.

மற்ற அனைவரும் இந்த கொள்ளை திட்டத்தின் பங்காளிகளாக தமது பங்கை சரியாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக அதில் காமெடி நடிகரான செம்பான் வினோத் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். படம் ஆரம்பித்தில் இருந்து இறுதிவரை கதை அவர் வாயிலாகவே சொல்லப்படுவதே அதற்கு சாட்சி. அவரும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடியில் கலக்கி எடுக்கிறார்.

அடுத்ததாக கவனம் ஈர்ப்பவர் நீரஜ்மாதவ்.. நுணுக்கமாக கேமரா பொருத்துவதில் வல்லவரான இவர் தனது நண்பர்களுக்காக சோப்புடப்பாவில் கேமரா செட் செய்து, அதில் தனது கடையின் விளம்பரத்துக்காக லேபிளை ஓட்டியதால் மாட்டிக்கொள்ளும் காட்சி நம்மை விலாநோக சிரிக்கவைக்கிறது. ஆனால் பின்னாளில் இந்த கொள்ளைக்கான திட்டத்தை தனது கேமரா டெக்னாலஜியால்  எளிதாக்கி தருவதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார் நீரஜ் மாதவ்.

நேர்மையான அரசு ஊழியையாக வந்து மரணத்தை தழுவும் ரீனு மேத்யூசும் இழந்த பணத்தை மீட்க போராடும் தனது தந்தையின் முடிவுக்காக வேறு வழியின்றி இந்த கொல்லைதிட்டத்திற்கு சம்மதிக்கும் சனுஷாவும் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். வில்லன் ஜாய்மேத்யூ வழக்கம்போல் தான்..

கொள்ளையடிக்கும் கதை என்பதால் அதில் ஏதாவது புதுமை காட்டினால்தான் தப்பிக்க முடியும் என்பதை இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால் தான் காட்சிக்கு காட்சி காமெடி, பணத்தை கொள்ளையடிப்பதில் வித்தியாசமாக கையாளும் முறைகள் என திரைக்கதையில் கவனம் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக க்ளைமாக்சில் பிருத்விராஜ் பணத்தை அடித்துக்கொண்டு போவதாக நம்மை நினைக்க வைத்து, பின்னர் ஏமாந்ததாக நினைக்கும் மற்ற ஆறுபேருக்கும் அவர்களது பங்கு கூரியரில் வீடு தேடிவருவதாக அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து பிருத்விராஜை ஜென்டில்மேனாக்கி இருக்கிறார். க்ளைமாக்சில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையை ஓபன் செய்யும் இடம் இன்னொரு க்ளைமாக்ஸ் என்றுகூட சொல்லலாம்.

ஆக மொத்தத்தில், சப்தமஸ்ரீ தஸ்கரா ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம்.

Comments are closed.