காமன் வெல்த் மாநாடு நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு டைட்டிலோடு வரும் படத்தை வெளியிட அனுமதித்தது ஆச்சரியம்தான். முல்லைத்தீவு சண்டை நேரத்தில் அங்கிருந்து தப்பி படகு மூலம் அகதிகளாக வரும் ஒரு கூட்டம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் படம்.
பலமுறை செய்திகளில் படித்த, பார்த்த உண்மை தகவல்களை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் துணிச்சலுடனே, அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சண்டை மூளும் தொடக்க நாட்களில் அந்த பகுதி மக்களின் மன உணர்வுகளை முதல் காட்சியிலேயே பதிவு செய்திருக்கிறார். பதுங்கு குழிகளையே வீடுகளாக்கி வாழ்ந்து வரும் மக்கள் உணவுக்கு எப்படி அல்லாடுகிறார்கள், அவர்களை அந்த நிலையிலும் ஒருவன் எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறான் என்பதையும் காட்டும் அந்த காட்சி பரிதாபம்.
ஒரு பக்கம் ராணுவம் ஒரு பக்கம் போராட்டக்குழு இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு திண்டாடும் மக்களின் கையறு நிலையையும், மனக்கொதிப்பையும் காட்டும் விதமாக அந்த போராட்டக் குழுவின் தலைவராக வரும் கதாபாத்திரத்திடம் ஹீரோ கேரக்டர் பேசும் வசனம் பார்வையாளர்களுக்கு பல கேள்விகளை தூண்டும். ‘நீங்கள் இங்கேயே இருக்கச் சொல்றீங்கள் ராணுவம் எங்கள் குழந்தை, பெண்டு, பிள்ளைகளை கொண்டு போடுறாங்கள் என்ன செய்ய”, “அழுகின பிணத்துக்கு மத்தியிலா நம் நாடு மலரனும்” என்ற வசனங்கள் பளிச். அதற்கு பதில் சொல்லும் விதமாக அந்த போராட்டக்குழு தலைவன் தன் ஆட்கள் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து சுடச்சொல்லி மடிவது, ஜாக்கிரதையாக கையாண்டிருக்கும் திரைக்கதை யுக்தி.
அகதிகளாக தமிழகம் வர விரும்பும் மக்களை அனுப்புவதற்கென்றே இருக்கும் விக்டர் தன் காதலி வயதான ஜோடி, கைகுழந்தையோடு வரும் குடும்பம் மற்றும் சிலருடன் படகில் புறப்படுகிறான். சண்டை உக்கிரமடைகிரது. கடலில் நாணுவத்திற்கு தெரியாமல், போராட்டக்காரர்கள் கண்ணில் படாமல் படகு நகர்கிறது. படகு நகர, நகர இவர்கள் நல்லபடியாக கரைக்கு சென்று சேரவேண்டுமே என்ற பதைபதப்பு நம் மனதில் அப்பிக்கொள்கிறது. சுயநலத்தோடு அதிகாரம் செய்யும் ஒருவன். தான் இறந்தாலும் கடல் நீரைக்குடித்து தாகம் தீர்த்து பிள்ளைக்கு பாலூட்ட நினைக்கும் அம்மா, காதலனின் கரு ரத்தமாக வெளியேறுவதை மறைத்துக் கொண்டு காதலனை தேற்றும் காதலி, பசிக்கு அழம் குழந்தையின் அழுகுரலுக்காக கடலில் பாய்ந்து இளநீர் எடுக்கும் இளைஞர். மகனைப் பார்க்க தள்ளாத வயதிலும் துடுப்பு போடும் பெரியவர் என்று படகிற்குள் இருக்கும் கனமான பாத்திரங்களால் படகும், நம் மனமும் தத்தளிக்கிறது.
கரைக்குப் பக்கத்தில் இருப்பது தெரியாமல் வேறொரு திசையில் படகை செலுத்தும் காட்சி பரிதாபம். ஒவ்வொருவராக மயங்கி மடியும் தருவாயில் காக்கிநாடா கடற்கரையோரம் படகு ஒதுங்க பத்து நாள் பகலிரவு பட்டினியால் குற்றுயிரும் குலை உயிருமாக கரைக்கு தூக்கி வரும் மனித உடல்களைப் பார்க்கும் போது நிஜத்தின் நாற்றத்தால் வயிற்றைப் குமட்டுகிறது. உலகம் முழுதும் மிச்சமிருக்கும் மனிதமும் செத்துப்போய்விட்டால் எதாவது ஒரு படகு கரையை தொலைத்துவிட்டு கடலுக்குள் மிதந்து கொண்டுதான் இருக்கும்.
முதல் பாதியில் கொஞ்சம் நாடகத்தனம் தெரிகிறது. மறுபாதியில் கடலும், இருளும் வி.கே.ராம்ராஜின் ஒளிப்பதிவும் படத்தின் பரபரப்பான நகர்வுக்கு உதவுகிறது. சில இடங்களில் சிவனின் இசை கடல் அலைகளோடு சேர்ந்து ஓங்காரமாகக் கேட்கிறது. புதியவர் அஜெய் நூத்தகி எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிக்க சம்மதித்ததற்கு லக்ஷ்மிகாந்திற்கு பாராட்டுக்கள். இயக்குனரே ஹீரோவாக நடித்திருப்பாதால் அஜெய் பல இடங்களில் மனதை தொடுகிரார். குமரன் கதாபாத்திரத்தில் வரும் ரமேஷ், ஹீரோயின் ஜெனிபர் ஆகியோரை இனி அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்.
ஒரே உறுத்தல் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் அடிவாங்குவதையும், ரத்தம் சிந்துவதையும் காட்டிக்கொண்டிருப்பது, திருப்பி அடித்த சம்வங்களை யாராவது காட்டுங்களேன்.
ராவண தேசம் – ரணம்