நட்சத்திர கூட்டணி என்று சொல்வார்களே.. அது ராஜாராணி படத்துக்கு நன்றாகவே பொருந்தும். பின்னே.. தயாரிப்பது ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.எம்.ஆர்.புரடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம். நடித்திருப்பவர்கள் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நயன்தாரவின் அழகான ஜெராக்ஸ் காப்பியான கேரள பைங்கிளி நஸ்ரியா.. அதுவும் போதாதென்று இவர்களுடன் காமெடி கலாட்டாவுக்கு கைகோர்த்திருக்கிறார் சந்தானம்.. இதுபோதாதா.. நட்சத்திர கூட்டணி அமைய..?
இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, படத்தை இயக்கிருக்கிறார் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ. முதலில் இந்தப்படத்தின் ட்ரெய்லரை மட்டும் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிடலாம் என தீர்மானித்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு படத்தின் இசைவெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீடு இரண்டையும் சேர்த்து ஆகஸ்ட் 23ஆம் தேதி பிரமாண்டமாக, ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது. எல்லோரையும் கவர கூடிய வகையில் இனிமையான பாடல்கள், மற்றும் நெஞ்சை நிறையவைக்கும் இசையுடன் இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசைப்படமாக ராஜாராணி இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இயக்குனர் அட்லீ.