24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்று விளம்பரங்களுடன் நிறைய படங்கள் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே கதையின் சுவராஸ்யத்தை கூட்டவும், அப்படி ஒருநாளில் என்னதான் நடக்கிறது என்பதை பார்ப்போமே என்று ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை தூண்டவும் தான் இந்த டைமிங்கை ஃபிக்ஸ் பண்ணுகிறார்கள்.
சமீபத்தில் வெளியான சென்னையில் ஒரு நாள் மற்றும் நேரம் ஆகிய படங்களின் கதைகூட 24 மணிக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான். இப்படியிருக்க நான்கு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை படமாக்கினால்..? கேட்கவே சுவராஸ்யமாக இருக்கிறதல்லாவா.? அப்படி ஒரு படமாக உருவாகியிருக்கிறது ‘ப்ரியமுடன் ப்ரியா’ என்கிற திரைப்படம்.
பண்பலை வானொலி நிலையத்தில் தொகுப்பாளராக பணிபுரியும் ப்ரியா, ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நேயர்களுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென வரும் ஒரு நேயரின் அழைப்பால் அதிர்ச்சியாகும் ப்ரியா, அதிர்ச்சியை சமாளித்து தொடர்ந்து எப்படி அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடிக்கிறாள் எனபதைத்தான் இரண்டு மணிநேர படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஜே.சுஜீத். இவர் சத்யராஜ் நடித்த சேனா என்ற படத்தை இயக்கியவர்.
முருகா, பிடிச்சிருக்கு படங்களில் நடித்த அசோக் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கண்டேன் படத்தில் நடித்த ராஷ்மி கௌதம் நடிக்கிறார். இவர்களுடன் வானொலி நிலையத்தின் நிர்வாக இயக்குனராக முக்கிய வேடத்தில் சுரேஷ் நடிக்கிறார்.