நீண்ட காலம் பெட்டிக்குள் முடங்கிப் போயிருந்த தங்கர் பச்சானின் ’களவாடிய பொழுதுகள்’ படம் ஒருவழியாக வெளிவரப்போகிறது. இதன் அறிமுக விழாவிற்கு வைரமுத்து, பிரபுதேவா இருவரும் வந்திருந்தனர். எப்போதும் மைக்கில் இடியாய் முழங்கித் தள்ளும் தங்கர் பச்சான் இந்த முறை முன் கூட்டியே எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசித்தார். ஆனாலும் பேச வந்த விஷயம் அதுவல்ல என்பதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.
அடுத்து பேச வந்த பிரபுதேவா, “இந்த படம் வெளி வராமல் இயக்குனர் தங்கர்பச்சான் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டார். எப்போதாவது போன் பண்ணி பேசுவார். இநத படத்தை பற்றிதான் ரெண்டுபேரும் பேசுவோம். பாலிவுட்டில் என்கிட்டே பேசுறவங்க கிட்ட இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கேன். ஒவ்வொரு முறையும் தமிழில் என்னோட அடுத்த படம் களவாடிய பொழுதுகள் தான் என்று சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதனால் அங்குள்ளவர்களுக்கே இந்த படம் பற்றி தெரியும். படத்தில் நான் கதையோடு வாழ்ந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை தங்கர் இப்படி நில்லுங்க, அந்தப்பக்கம் திரும்புங்க என்று சொன்னதை நான் அப்படியே செய்தேன் அவ்வளவு தான். அதனால் எனக்கு இங்கு கிடைத்த பாராட்டுக்கள் எல்லாம் இயக்குனர் தங்கர் பச்சானுக்கே.” என்று தங்கரை புகழ்ந்து பேசினார். தங்கர் மேல் உள்ள மரியாதைக்காக அழைத்ததும் இந்த விழாவிற்கு வந்து நின்றார் பிரபுதேவா.