”என் பின்னால் வராதீங்க” – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 03

89

அது சென்னைக்கு வந்த புதிது. எந்த இலக்கும் தெரியாமல் கிழக்கும் தெரியாமல் இருந்த நேரம். திருவல்லிக்கேணியில் ஒரு பழைய வீட்டை பல பாகங்களாக பிரித்து அறைகளாக மாற்றிய அந்த ‘புராண மந்திர்’ பங்களாவில்தான் தங்கியிருந்தேன். ஒழுங்காக வாடகை தரும் இரண்டு நண்பர்களோடு நான் ஒண்டு குடித்தனம் மாதிரி இருந்தேன். தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டாலே ஆச்சரியம். அப்படியொரு சூழல். இந்த லட்சனத்துல ஊர்லருந்து ‘நான் கண்ணனை பார்க்கப் போறேன்”னு கூடப் படிச்ச பசங்க கிளம்பி வந்து நிற்பானுங்க. அவனுங்க இருக்கும் வரைக்கும் போஜனத்துக்கு பங்கம் வராது. ஆனால் அவனுங்க போறதுக்குள்ள பேப்பர்ல பார்த்த சென்னை இடங்களையெல்லாம் பார்க்கனும்னு அடம் பிடிப்பானுங்க. அதுல முக்கியமான ஒரு இடம் போயஸ் கார்டன். ஆமாங்க ரஜினியை பார்க்கனும்னு வந்து உயிர எடுப்பானுங்க.

ஒருநாள் கொலை பட்டினி முதல் நாள் மதியத்திலிருந்து சாப்பிடல. தண்ணிதான் தலைமை உணவாக இருந்தது. வறட்சியான காலத்தை விட பசியோடு இருக்கும் போதுதான் தண்ணீரோட அருமை தெரியும். இப்பவும் விருந்து நடக்கும் இடங்கள்ல தர்ற தண்ணீர் பாட்டிலை பாதி குடிச்சிட்டு அப்படியே வெச்சிட்டு போறவங்கள பார்த்தால் கடுப்பாவேன். அப்படி நீராகாரத்தோடு ரூம்லயே புக் படிச்சிக்கிட்டு, இருக்கும் நாளில் தான் ரஜினியைப் பார்க்க அடுத்த பார்ட்டி ஊர்லருந்து லேண்ட் ஆனது. ‘இவ்வளவு நாளா சென்னையிலிருந்தும் நமக்கு ஒரு நாள் கூட அவரை பார்க்கனும்னு ஆசையில்லை. எப்படிதான் கிளம்பி வர்றானுங்களோ’ன்னு எரிச்சலா இருக்கும். ஆனா வயிறுன்னு ஒண்ணு இருக்கே என்ன பண்றது. காலையில் ஃபுல் கட்டு கட்டிவிட்டு ரஜினியை பார்க்க புறப்பட்டோம். எத்தனை மணிக்கு தெரியுமா? விடியற்காலை ஐந்தரை மணிக்கு. அப்போதெல்லாம் தினமும் ரஜினி ரசிகர்களை சந்திப்பார். அன்றைக்கு அவரோட பிறந்தநாள். அதனால் முதல் ஆளாக அவரை பார்த்து விடலாம்னு கிளம்பினோம்.

போய் பார்த்தால் எங்களுக்கு முன்னால் பெரிய வரிசை நின்றிருந்தது. சத்யநாராயணனுக்கு மட்டுமே கட்டுப்படும் முரட்டுக் கூட்டம் அது. “தலைவா…தலைவா” என்ற ஆரவாரம் சத்தி சாரின் தலை தெரியும் போதெல்லாம் அடங்கிப் போய்விடும். வாழை மரம், தோரணம் என்று மங்களகரமாக இருந்தது வீடு. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. பிரிமியர் பத்மினி காரில் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் குட்டி பசங்களா பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். பிஸ்கட் கலரில் யூனிபார்ம். அதற்கும் பெரிய கூச்சல். “டேய்ய்ய்ய்” சத்தியின் குரல் அடக்கியது. சரியாக ஒன்பது மணிக்கு ரஜினி வரப்போவதாக பெரிய கேட்டை இருவர் திறக்க, கதர் வேஷ்டி சட்டையில் ஒரு பருத்திப் பூவாக சிரித்துக் கொண்டே ரஜினி வெளியே வர, ஏரியா நடுநடுங்க “தலைவா” கோஷம் எழும்பியது. அப்படியே மெய் மறந்து தன் ரசிகர்களின் அன்பை பார்த்துக்கொண்டிருக்க, அதே உணர்வில் ரசிகர்களும் ரஜினியை பார்த்துக்கொண்டிருந்தனர். ரொம்பவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது கூட்டம். அப்போதுதான் முரட்டு பாசத்தோடு இருந்த அந்த ரசிகர் செய்த காரியத்தைப் பார்த்து ஆடிப்போனார் ரஜினி. வீட்டுப் பக்கத்தில் இருந்த மரத்தில் விடுவிடுவென ஏறிய அந்த ரசிகர் “தலைவா..தலைவா” என்று குரல் கொடுக்க, அவரை மட்டும் ஸ்பெஷலாக பார்த்து கையை ஆட்டி புன்னைகைத்தார். அவ்வளவு தான் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி அந்த ரசிகர் உரத்த குரலில் கத்தியபடியே பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியால் கையை கீறிக் கொண்டார். ரத்தம் குபுகுபுவென வெளியேற அதை பார்த்து பதறிப்போனார் ரஜினி. “ஏன்…இப்படி ஏன்.. நான் தான் வந்துட்டேன்ல” என்றபடியே கொஞ்சம் கோபத்தோடு சத்தி சாரிடம் ஏதோ சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய் விட்டார். அந்த ரசிகரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக ஏற்பாடு செய்தார்கள் வீட்டிலிருந்தவர்கள். அப்போது நடந்த தள்ளு முள்ளுவில் எனக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அதோடு ரூமிற்கு வந்து சேர்ந்தோம். “ இது தேவையாடா..” என்று நண்பனிடம் கடிந்து கொண்டேன். ஆனால் அவன் இன்னும் ரஜினி அலையிலிருந்து விலகவில்லை. “உனக்கென்னடா தெரியும் தலைவனோட அருமை. கையை அறுத்திகிட்டான் பாரு அதுதாண்டா பாசம். நீயும் ஒரு நாளைக்கு இதே வாசல்ல தலைவனை பார்க்க வந்து நிற்ப பாரு.” ஏதோ சாபம் விட்டது போல சொன்னான். நல்ல நண்பன் அவன் அதனாலதான் அவன் சாபம் பலிச்சது.

சில வருடங்களுக்குப் பிறகு நான் பத்திரிக்கைத் துறைக்கு வந்து விட்டேன். இதயம் பேசுகிறது, குங்குமம், இதழ் பணிபுரிந்து விட்டு குமுதம் இதழில் பணியாற்றிய போது ரஜினியின் பிறந்த நாள் மலர் தயாரிக்கும் பணியில் முக்கிய பொறுப்பு ஏற்றிருந்தேன். ரஜினியை சந்திக்க நேரம் கேட்டிருந்த ஒருநாளில், பல்லாவரத்திலிருந்து ஆபீஸுக்கு வந்துகொண்டிருந்தேன். ரயில்வே பாலம் வேலை நடைபெறுவதால் நல்ல ட்ராபிக். போன் அடிக்கிறது. எடுக்க முடியவில்லை. ஒரு கையில் செல்லை எடுத்துப் பார்க்கிறேன் “சூப்பர் ஸ்டார்’ “சூப்பர் ஸ்டார்” என்று மின்னுகிறது போன் ஸ்கிரீனில்.. பதட்டமாகிறேன். ஆனால் வண்டியை ஓரம் கட்ட முடியாது. முடிந்தவரை பேசி விடலாம் என்று வண்டியிலிருந்தபடியே போனை ஆன் பண்ணினேன், “சார் நாங்க ரஜினி சார் வீட்டிலிருந்து பேசுறோம்…..“ என்ற குரல் சட்டென்று “நீங்க வண்டியை நிறுத்தி விட்டு போன் பண்ணுங்க அவசரமில்ல” என்று அக்கறையோடு சொல்லி போனை வைத்தார்கள். இந்த போனுக்காகத்தான் நாலு நாட்களாக காத்துக்கிடக்கிறேன். ஒதுங்க இடம் கிடைத்த ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ரஜினி சார் வீட்டுக்கு போன் பன்ணினேன். “தேனி கண்ணன் சார் வண்டியை நிறுத்திட்டீங்களா? பாதுகாப்பான இடத்துல தான இருக்கீங்க. சாரை சந்திக்க டைம் கேட்டிருந்தீங்கல்ல, நாளைக்கு காலையில் 10 மணிக்கு போயஸ்கார்டன் வீட்டுக்கு வர முடியுமா” என்று கேட்க நானும் அலுவலக நண்பர்களோடு வருவதாக சொல்லி வைத்தேன்.

இந்த உரையாடலில் கவனிக்க வேண்டிய விஷயம், சாலையில் வரும்போது என்னை எச்சரிக்கை செய்து பாதுகாப்பை உறுதிசெய்த அக்கறை. இதெல்லாம் சூப்பர் ஸ்டார் தன் அலுவலக ஊழியர்களுக்கு சொல்லி வைத்திருக்கும் விஷயம் என்பதை அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். ஆனால் ரஜினி சாரின் இந்த அக்கறையை ஒரு நாள் நேரிலும் பார்க்க நேர்ந்தது. போயஸ் வீட்டில் ரஜினியை சந்தித்த சம்பவத்திற்கு முன் ரசிகர்கள் மேல் அவர் வைத்திருக்கும் அந்த பாசக் காட்சியை பதிவு செய்து விடுகிறேன்.

காமராஜர் அரங்கத்தில் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் வரிசையில் நானும் என் நண்பரும் அமர்ந்திருந்தோம். ரஜினி வரப்போற தகவல் வந்து அரங்கம் பரபரப்பானது. வேகவேகமாக வந்த ரஜினி குழந்தைகள் நடத்திய நாடகத்தை மனம் விட்டு ரசித்து சிரித்துப் பார்த்தார். தொடர்ந்து 4 மணிநேரம் அமர்ந்து பார்த்தார். விழா முடியும் தருவாயில் நானும் நண்பரும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னதாகவே அரங்கத்தின் வெளியே வந்து சாலையின் ஓரத்தில் நின்றிருந்தோம். அப்போது ஒரு கார் அரங்கத்தை விட்டு வெளியேறுவதை பார்த்தேன். முழுக்க கண்ணாடி ஏற்றப் பட்டிருந்த அந்த கார் ரஜினியின் கார் போல தோன்றவும். சந்தேகத்தோடு அந்த காருக்கு உற்சாகமாக கையை ஆட்டி வைத்தேன். எங்கள் அருகில் வந்த காரின் வேகம் குறைய, கருப்புக் கண்ணாடியை இறக்கி விட்டு சிரித்தபடியே கையை ஆட்டினார் சூப்பர் ஸ்டார், பரவசமாகிப் போனோம் நானும் நண்பரும்.

இந்தக் காட்சியை பின்னால் வந்த புல்லட் வாலிபர்கள் இருவர் பார்த்து விட்டு “ஏய் ரஜினிடா… தலைவா..” என்று துரத்த ரஜினியின் கார் எங்களை விட்டு வேகமெடுத்தது. புல்லட் போற வேகத்தைப் பார்த்து பதட்டப்படியே நாங்களும் பின் தொடர்ந்தோம். (மெதுவாகத்தான்) ஆனால் அடுத்த சிக்னலில் ரஜினியின் கார் நின்றிருந்தது… படுவேகத்தில் வந்த புல்லட்டும் காரை ஓவர் டேக் செய்து நின்றது “தலைவா……தலைவா..” என்ற கோஷம் குறையாமல் இதை காருக்குள்ளிருந்து கவனித்த ரஜினி சரசரவென்று கண்ணாடியை இறக்கினார். “ஏன் இப்படி..எதுக்கு இவ்வளவு வேகம்..” என்று பதட்டத்தோடு சொன்னவர், கூல் ஆகி ஆள் காட்டி விரலை உயர்த்தி “என்னை ஃபாலோ பண்ணாமல் வீட்டுக்குப் போங்க கண்ணுங்களா.” என்று செல்லமாய் அவர்களை கண்டித்து விட்டு, டிரைவருக்கு சைகை காட்ட, பறந்தது ரஜினியின் கார். தலைவனின் வார்த்தையை தட்டாத ரசிகர்கள் வேறு பக்கம் புல்லட்டை திருப்பினார்கள். இப்படி தன் ரசிகர்கள், தன்னை பார்க்க வருபவர்கள் என்று அத்தனை பேர் மீதும் அக்கறையோடு இருப்பார் ரஜினி.

இனி நான் போயஸ் கார்டனுக்கு உங்களை கூட்டிச் செல்கிறேன். ரஜினியின் வீட்டிலிருந்து சொன்னபடியே மறுநாள் காலை ஒன்பது மணிக்கு போயஸ் கார்டனில் இருந்தேன். அலுவலக நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். எங்கள் அலுவலகம் சார்பாக தயாரித்திருந்த ரஜினியின் பிறந்தநாள் சிறப்பு மலரை அவருக்குக் கொடுப்பதற்காகதான் இந்த சந்திப்பு. மலர் தயாரிக்கும் பணியில் ரஜினியை சந்திக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். அந்த ஏற்பாட்டின்படிதான் இப்போது நாங்களெல்லாம் ரஜினி வீட்டின் முன் இருந்தோம். அலுவலகத்தில் இருந்தவர் எங்களை அழைத்து ஹாலில் அமர வைத்தார். “சார் இப்ப வந்திடுவாங்க. டீயா, காபியா.” என்றவர் சூடு பறக்க எங்களுக்கு டீ கொடுத்தார். நாங்கள் டீ குடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ரஜினி வருவதை பார்த்த ஊழியர் அதை எங்களுக்கு தெரியப்படுத்த எத்தனித்தபோது ரஜினி கையை உயர்த்தி “டீ சாப்பிட்டு முடிக்கட்டும்’ என்று சிக்னல் காட்டுகிறார். இதை நான் கவனித்து நண்பர்களை தயார் படுத்தவும், ரஜினி ஹாலுக்குள் வரவும் சரியாக இருந்தது. பாசக் கலரில் பட்டு வேஷ்டியும் வெள்ளை குர்தாவும், கழுத்தில் நீண்ட கருப்பு கயிரில் தொங்கும் ருத்ராட்ஷம் என்று சிரித்துக் கொண்டே வந்தார். மதிப்பிற்குரிய இதழாசிரியர் ரஜினி சிறப்பு மலரை அவரிடம் கொடுத்து எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்.

“எவ்ளோ புக் அடிச்சீங்க… அவ்வளவும் வித்துடுமா” என்று வரிசையாகக் கேட்டார். இளையராஜாவின் கேள்வி பதில் தொடரைப் பற்றி பேசினார். “அவர் எழுத சம்மதிக்க மாட்டாரே எப்படி எழுத வெச்சீங்க. ரொம்ப அபூர்வமான தகவலையெல்லம் சொல்றாரு. அரசாங்க சின்னத்தில் இருக்கறது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்னுதான் நானும் நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா அது மதுரை மேற்கு கோபுரம்னு ஆச்சரியமான தகவலை சொல்லியிருக்காரே அதுக்கு ஃப்ரூப் இருக்கா” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ரஜினி. அதற்கான ஆதாரம் இருப்பதை நான் உறுதிபடுத்தியவுடன் வியந்து போனார். ஒரு மணிநேரம் பேச்சு நடந்தது. பிறகு எல்லோருடனும் போட்டோ எடுத்துக் கொண்டார் ரஜினி.

வெளியே வந்ததும் என் அலுவலக நண்பர்கள் எல்லோரும் எனக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தனர். “அருமையான சந்திப்பு”. பதிவு செய்ய முடியாமல் போயிடுச்சே.” எங்கள் இதழாசிரியர் வருத்தப்பட்டார். “சார் என் மெமரியில் இருக்கு. நான் எழுதிடுறேன்.” என்றேன். “அப்படியா நீங்க எழுதிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு. அப்ப இந்த வாரம் கவர் ஸ்டோரி இதுதான்” என்றார். புறப்பட்டோம். ஆனால் அந்த செய்தி வெளிவந்தால் ரஜினியே எனக்கு போன் பண்ணுவார் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவர் போனில் சொன்ன விஷயம் பற்றி அடுத்த வாரம் சொல்றேன்.

(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன்

Leave A Reply

Your email address will not be published.