பள்ளிக்காதலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் இன்னொரு படம். பிளஸ் டூ படிக்கும் ஆதவ், காயத்ரியை விரும்புகிறார். இது காயத்ரியின் தந்தை அருள்தாஸுக்கு தெரியவர ஆதவ்வை போட்டு புரட்டி எடுக்கிறார். இதுவே காயத்ரிக்கு ஆதவ் மீது காதலை வரவைக்கிறது. எதிர்ப்பை மீறி காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே பள்ளிக்கூட மாணவன் தான் என்பதால் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்கள்தான் இவரது பாதையை தீர்மானிக்க முடியும். ஆதவ்வின் ஜோடியாக நடித்திருக்கும் காயத்ரி தந்தையைக் கண்டு மிரளும் காட்சியிலும் வீடு தீப்பற்றி எரியும்போது காதலனை கட்டிப்பிடித்தபடி நிற்கும் காட்சியிலும் நம்மை ஈர்க்கிறார்.
படத்தில் காயத்ரியின் அப்பாவாக வரும் அருள்தாஸ் தான் நடிப்பில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஸ்கோர் செய்கிறார். ஆதவ்வின் தந்தையாக வரும் கிஷோருக்கு நடிக்க குறைவான வாய்ப்பே கிடைத்தது நம்மை ஏமாற்றம் கொள்ளவைக்கிறது.
சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டுகிறது. ஆனால் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தை இயக்கியுள்ளார் ஏ.சி.துரை. டீனேஜில் காதல் வந்தால் என்ன ஆகும் என பழைய பாணி கதையிலேயே பயணித்திராமல் ஒரு புதிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். காரணம் பளிக்கூடம், காதல், மாணவர்கள் என சமீபத்தில் வந்த சில படங்களை இது ஞாபகப்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.
நடிகர்கள் : ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர், அருள்தாஸ், அனுபமா குமார்
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜவேல் ஒளிவீரன்
இயக்குனர் : ஏ.சி.துரை
தயாரிப்பு : அமிர்த கௌரி